ADDED : ஆக 02, 2024 02:03 AM
காங்கேயம், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., கட்சிகள் சார்பில், காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை மறியல் போராட்டம் நடந்தது. மா.கம்யூ., காங்கேயம் தாலுகா குழு செயலாளர் திருவேங்கடசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பழனிசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் முற்றிலுமாக புறக்கணித்தது, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மீது தாக்குதல், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அனைத்திலும் சலுகை வழங்கப்பட்டுள்ளது என பல்வேறு புகார்களை தெரிவித்து, 40 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தை தொடர கிளம்பியபோது, பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகில், அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.