/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காவிரி வெள்ளத்தால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
/
காவிரி வெள்ளத்தால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
ADDED : ஆக 02, 2024 01:21 AM
ஈரோடு, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நிவாரண முகாம்களில், 157 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதுடன், உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்ட காவிரிக்கரையை ஒட்டிய பகுதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெரிஞ்சிபேட்டை, அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம், கொடுமுடி, இழுப்புதோப்பு, வடக்கு தெரு, குலவிளக்கு அம்மன் கோவில், கொளாநல்லி போன்ற பல பகுதிகளில் வீடுகளை காவிரி ஆற்று நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அரசு வலியுறுத்துகிறது.
இதன்படி நேற்று மாலை நிலவரப்படி காவிரி ஆற்றை ஒட்டிய, 30 கிராமங்களில், 18 கிராமங்கள் உபரி நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மக்கள் தங்குவதற்காக, 77 நிவாரண முகாம் ஏற்பாடு செய்துள்ளனர். நேற்று மாலை வரை எட்டு முகாமில், 65 குடும்பங்களை சேர்ந்த, 157 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பவானி, கருங்கல்பாளையம், கொடுமுடி உள்ளிட்ட சில பகுதிகளில் தண்ணீர் அளவு மேலும் அதிகரித்தால் முகாமுக்கு வருகிறோம், எனக்கூறி தண்ணீர் சூழ்ந்த பகுதியில் உள்ள வீடுகளில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். இப்பகுதிகளையும் வருவாய் துறையினர் உட்பட மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.