/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பரிகார கழிவுகளால் கூடுதுறையில் பாழாகும் பவானி ஆறு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
/
பரிகார கழிவுகளால் கூடுதுறையில் பாழாகும் பவானி ஆறு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
பரிகார கழிவுகளால் கூடுதுறையில் பாழாகும் பவானி ஆறு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
பரிகார கழிவுகளால் கூடுதுறையில் பாழாகும் பவானி ஆறு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
ADDED : செப் 17, 2024 01:06 AM
பரிகார கழிவுகளால் கூடுதுறையில் பாழாகும் பவானி ஆறு
கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
பவானி, செப். 17-
பவானி கூடுதுறையில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு தெரியாத, அமுதநதி என மூன்று நதிகள் சேர்வதால், தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது. இதனால் இந்திய அளவில் பரிகாரம் செய்யவும், வழிபாடு செய்யவும் பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கானோர் குவிவர்.
பக்தர்கள் பரிகாரம் மற்றும் தோஷ நிவர்த்தி செய்ய, காவிரி மற்றும் பவானி ஆற்றங்கரையோரத்தில் பரிகார மண்படங்கள் உள்ளன. தை அமாவாசை, ஆடி அமாவாசையில் அதிகளவில் மக்கள் வருவதால், அப்போது தற்காலிக மண்டபம் அமைக்கப்படும். பரிகார பூஜைகளுக்கு வாழை இலை, வாழை மரம், பாக்குமட்டை தட்டு, பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள், விளக்குகள் உள்ளிட்டவை பயன்படுத்துகின்றனர்.
இவற்றை சேகரிக்க கோவில் வளாகத்தில் ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், குப்பைத் தொட்டியில் கொட்டாமல், பவானி ஆற்றில் வீசுகின்றனர்.
இதை தடுக்கும் வகையில், கம்பி வலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை சேதப்படுத்தி கொட்டுகின்றனர். இதேபோல் காவிரி ஆற்றங்கரை ஓரத்திலும், பரிகார கழிவு கொட்டுவது அதிகரித்துள்ளது. இரு ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது இந்த கழிவுகள் தண்ணீரில் அடித்து செல்கிறது.
ஆனால், தண்ணீர் ஓட்டம் குறைவாக இருக்கும் போது, தேங்கி துர்நாற்றம் வீசி முகம் சுளிக்க வைக்கிறது. பரிகார கழிவுகளை ஆற்றில் கொட்டுவதைத் தடுக்க, கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் கூறியதாவது: பரிகார கழிவுகளை சேகரிக்க, ௧௦க்கும் மேற்பட்ட பணியாளர் உள்ளனர். கோவில் வளாகத்தில், 15 குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. இதை மீறி ஒரு சில புரோகிதர்கள் மற்றும் மக்கள், பவானி மற்றும் காவிரியாற்றில் கொட்டி செல்கின்றனர். இதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
'இதை செய்தால் போதும்'
அதிக அளவில் பரிகார நடக்கும் நாளிலும், மறு நாளிலும், பவானி மற்றும் காவிரி ஆற்று கரையோர பகுதிகளில், கோவில் நிர்வாக அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டால், இதுபோன்ற செயல் தவிர்க்கப்படும். அதை மீறி கொட்டுவோருக்கு, பல ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.
அப்போதுதான் தென்னகத்தின் காசிக்கு வரும் பக்தர்கள், நொந்து கொள்ளாமல், மூக்கை பொத்திக்கொண்டு செல்வதை தவிர்க்க முடியும். மேலும் கோவில் வளாக பகுதியில் தங்கியுள்ள சிலர், படிக்கட்டு துறை பகுதியில் மலம் கழிக்கின்றனர். இதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க, நேரில் பார்த்து வேதனைப்பட்ட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

