ADDED : ஜூலை 17, 2024 02:15 AM
ஈரோடு;ஆடி மாத முதல் நாளில், காவிரி ஆறும் பாயும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், தேங்காய் சுடும் பண்டிகை நடப்பது வழக்கம். தேங்காயை தீயிலிட்டு இறைவனுக்கு படைத்து வழிபடுவர்.
அந்த கையில் ஆடி மாத பிறப்பான இன்று, தேங்காய் சுடும் பண்டிகை மாநகர், மாவட்டத்தில் பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்படும். தேங்காய் சுடுவதற்கு உதவும் அழிஞ்சி குச்சி விற்பனை, ஈரோட்டில் நேற்று களை கட்டியது. ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் உள்ள நேதாஜி தினசரி மார்க்கெட், ஆர்.கே.வி. சாலை, மணிக்கூண்டு பகுதிகளில் விறுவிறுப்பாக விற்பனை நடந்தது. ஒரு குச்சி, 10 ரூபாய் வரை விற்கப்பட்டது.
தேங்காயில் மஞ்சள் பூசி, தேங்காய்க்குள் எள், கடலை, வெல்லம், அவல் போட்டு, தேங்காய்க்குள் அழிஞ்சி குச்சியை சொருகி தீயில் சுடுவர். வெடிக்கும் தருணத்தில் தேங்காயை எடுத்து சென்று, அப்பகுதியில் உள்ள கோவிலில் உடைத்து வழிபடுவர். சுட்ட தேங்காயை சுவைத்து மகிழ்வர்.