ADDED : ஆக 02, 2024 02:01 AM
திருப்பூர், பரம்பிக்குளம், ஆழியாறு நீர்பாசன திட்டத்தின்(பி.ஏ.பி.,) கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறுகிறது. இதில், கடைமடையாக உள்ள காங்கயம், வெள்ளகோவில் பகுதியில், 48 ஆயிரம் ஏக்கர் நிலம் இந்த பாசன நீரை நம்பியுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில், பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பரம்பிக்குளம், துாணக்கடவு, பெருவாரிபள்ளம் உள்ளிட்ட பி.ஏ.பி., நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
இதற்கிடையில், கான்டூர் கால்வாயில் சிறிய அளவிலான பராமரிப்புப்பணி நடந்து வருகிறது; இப்பணியை விரைந்து முடிக்காததால், தண்ணீரை பாசனத்துக்கு திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 'பணியை விரைந்து முடித்து, பாசனத்துக்கு நீர் திறந்துவிட வேண்டும்' என, பி.ஏ.பி., பாசன நீரை பயன்படுத்தும் பல்வேறு விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் இந்நீரை நம்பியுள்ள கால்வாயின் கடைமடையாக உள்ள திருப்பூர் மாவட்டம், பல்லடம், பொங்கலுார், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, குண்டடம், காங்கேயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பல இடங்களில் கடும் வறட்சி ஏற்படுகிறது; கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் இருந்தும், செயற்கை வறட்சி நிலவுகிறது. இந்த விஷயத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் கவனம் விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.