/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விஷ ஜந்துக்களின் மண் சிலைகளை உடைத்து வழிபாடு
/
விஷ ஜந்துக்களின் மண் சிலைகளை உடைத்து வழிபாடு
ADDED : மே 06, 2024 02:28 AM
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே அய்யா கோவிலில் விஷ ஜந்துக்களின் களிமண் சிலைகளை உடைத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புன்செய்புளியம்பட்டி அடுத்த அலங்காரிபாளையத்தில், 200 ஆண்டுகள் பழமையான அய்யா கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம்.
சித்திரை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் விழாவில், பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் களிமண் உருவ சிலைகளை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.
மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். கோவில் வளாகத்தில் பாம்பு, தேள், பூரான், பல்லி மற்றும் சிலந்தி போன்ற விஷ ஜந்துகளின் மண் உருவ பொம்மைகள், ௨0 ரூபாய்க்கு விற்கப்பட்டன. பக்தர்கள் அதை வாங்கி அய்யன், கருப்பராயன், தன்னாசியப்பன் மற்றும் பாம்பாட்டி தெய்வங்கள் முன் வைத்து வழிபட்டு நடுகல்லில் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்வாறு வழிபட்டால் வீடு மற்றும் தோட்டப்பகுதிகளில் விஷ ஜந்துக்கள் தென்படாது. மனிதர்களை விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பதும் ஐதீகமாக கருதப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் மண் பானைகளை அதிகம் வாங்கி சென்றனர்.
இதையொட்டி புன்செய்புளியம்பட்டி, சத்தி மற்றும் நம்பியூர் பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.