/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடுமுடி, பவானியில் தேரோட்டம் கோலாகலம்
/
கொடுமுடி, பவானியில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : ஏப் 23, 2024 04:36 AM
கொடுமுடி: கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களுள் ஒன்றானதும், சிவன், பிரம்மா, விஷ்ணு மும்மூர்த்திகள் தலமாகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலில், சித்திரை தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
இதன் பிறகு பஞ்ச வாத்தியங்கள் ஒலிக்க விநாயகர், மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் சுவாமிகள், தனித்தனியே மூன்று தேர்களுக்கு எழுந்தருளினர்.
இதை தொடர்ந்து கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். சிவனடியார் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியம் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். மலையம்மன் கோயில் வீதி, கடைவீதி, மணிக்கூண்டு, மற்றும் காவேரிரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியே தேர்கள் பவனி வந்து நிலை சேர்ந்தன.
பவானியில்...
பவானி, கூடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவிலில், ஆதிகேசவ பெருமாள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, 12 ஆண்டுகளுக்கு பின் புதிதாக அமைக்கப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருளினார்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக, நுாற்றுக்கணக்கான பக்தர்களால் இழுத்து செல்லப்பட்ட தேர் மீண்டும் கோவிலில் நிலை சேர்ந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

