ADDED : ஏப் 02, 2024 04:36 AM
பவானி: சேலம் மாவட்டம் செக்கானுாரை சேர்ந்தவர் குமர குருபரன். 25; திருநம்பியான இவர், அம்மாபேட்டையில் கரிய காளியம்மன் கோவில் அருகே, ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் மாலை, 5;௦௦ மணியளவில் ஓட்டல் முன்பகுதியில் பெஞ்சில் அமர்ந்திருந்தார்.
அப்போது டூவீலரில் வந்த இருவர், குமரகுருபரனை இழுத்து சென்று இருசக்கர வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அவர் மறுத்து திமிறவே, தயாராக கொண்டு வந்திருந்த ஆடு வெட்டும் கத்தியால், கழுத்து மற்றும் கையில் வெட்டினர்.
வலியால் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைப்பார்த்த மர்ம ஆசாமிகள் இருவரும், திருநம்பியை விட்டு விட்டு டூவீலரில் ஏறி தப்பினர். ரத்தக் காயங்களுடன் தவித்தவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமரகுருபனை வெட்டிய ஆசாமிகளை, அம்மாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

