/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தகிக்கும் வெயிலில் வெளியே நடமாடாதீர் ஈரோடு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
/
தகிக்கும் வெயிலில் வெளியே நடமாடாதீர் ஈரோடு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
தகிக்கும் வெயிலில் வெளியே நடமாடாதீர் ஈரோடு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
தகிக்கும் வெயிலில் வெளியே நடமாடாதீர் ஈரோடு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
ADDED : ஏப் 25, 2024 05:05 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட அறிக்கை:
ஈரோடு மாவட்டத்தில் வெப்ப நிலை அளவு, இந்தியா அளவில், 2வது இடத்திலும், தமிழகத்தில் முதல் இடத்திலும் உள்ளது. மனித உடலின் சராசரி வெப்பநிலை, 37 டிகிரி செல்சியஸ். சுற்றுப்புற சூழல் வெப்பநிலை அதிகமாகும்போது, அதிகமான வியர்வை வழியாக உப்பு, நீர் சத்து அதிகம் வெளியேறுகிறது. கோடை வெப்ப தாக்கத்தால் அதிக தாகம், தலைசுற்றல், கடும் தலைவலி, தசைப்பிடிப்பு, உடல் சோர்வு, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் குறைந்த அளவே வெளியேறுதல், மயக்கம், வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். வெப்ப தாக்க அதிர்ச்சி ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கோடை வெப்ப தாக்க பாதிப்புகளை தடுக்க காலை, 11:00 முதல் மாலை, 4:00 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். நடமாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், குடையை கொண்டு அல்லது தலையில் துண்டை கட்டி கொண்டு செல்ல வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க தண்ணீர், உப்பு கலந்த மோர், உப்பு மோர் கலந்த அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறு, சர்க்கரை உப்பு கரைசல் போன்றவை பருகலாம்.
தாகம் இல்லாவிட்டாலும், தண்ணீரை அதிகமாக பருக வேண்டும். தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி, நுங்கை உணவாக எடுத்து கொள்ளலாம். வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். புகை பிடித்தல், மது, செயற்கை பானங்களை தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம்.
கார்களை உபயோகிப்போர், உங்கள் குழந்தைகள், செல்ல பிராணிகளை வெயிலில் காருக்குள் தனியாக வைக்க வேண்டாம். கடும் வெயிலில் உடல் வெப்பமடையும்போது, ஐஸ் வாட்டர் போன்ற மிக குளிர்ந்த பானங்களை தவிர்க்க வேண்டும். கோடை காலத்தில் பரவும் நோய்களான அம்மை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, வெயில் கொப்பளங்கள் ஏற்பட்டால், அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

