கோபி: கோபியில் நடப்பாண்டு துவங்கி, 125 நாட்களுக்கு பின், முதன் முறையாக பலத்த மழை நேற்றிரவு பெய்தது.
கோபி மற்றும் சுற்று வட்டார பகுதியில், நேற்று காலை முதலே கத்திரி வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் இரவு, 7:55 மணிக்கு, திடீரென சாரல் மழை பெய்தது. கோபி பஸ் ஸ்டாண்ட் சாலை, சத்தி சாலை, மொடச்சூர் சாலை, பாரியூர் சாலை, புதுப்பாளையம், மேட்டுவலவு உள்ளிட்ட பகுதியில், ஐந்து நிமிடம் மட்டுமே நீடித்தது. அதன்பின், 9:00 மணி முதல், 9:20 வரை பலத்த மழை பெய்தது. அதையடுத்து வானம் மேகமூட்டமாகவும், லேசான துாரல் மழை பெய்தபடியும் இருந்தது. நடப்பாண்டு துவங்கி, 125 நாட்களுக்கு பின், நேற்று தான் முதன் முறையாக கோபியில் மழை பெய்தது.
தீ விபத்தில் வீடு சாம்பல்
ஈரோடு, மே 6-
ஈரோடு, கொல்லம்பாளையம், எல்.ஜி.ஜி.எஸ். காலனியை சேர்ந்த ஜாகீர் உசேன் மனைவி சாஜாதி பேகம், 52; இவரின் தங்கை சாய்னா பேகம், விறகு அடுப்பில் நேற்று மாலை தண்ணீர் காய வைத்தார். ஆனால், அடுப்பை அணைக்காமல் விட்டு விட்டார்.
அதிலிருந்த பறந்த தீப்பொறி வீட்டுக்குள் பரவி தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ பரவி வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. ஈரோடு தீயணைப்பு துறையினர், 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், வீட்டு உபயோக பொருட்கள், வீட்டின் மேற்பகுதி முழுமையாக தீக்கிரையானது.
பெண்ணை வீடியோ
எடுத்த வாலிபர் கைது
தாராபுரம், மே 6-
தாராபுரம், உடுமலை ரோட்டை சேர்ந்தவர் சதீஷ், 20; அலங்கியத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு நேற்று சென்றிருந்தார். அதே பகுதியில் ஒரு வீட்டு பாத்ரூமில் குளித்து கொண்டிருந்த, 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை, மொபைல் போனில் சதீஷ் வீடியோ எடுத்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சதீஷை பிடித்து, தர்ம அடி கொடுத்து, அலங்கியம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரித்த போலீசார் சதீஷை கைது செய்தனர்.
அ.தி.மு.க., சார்பில்
தண்ணீர் பந்தல் திறப்பு
தாராபுரம், மே 6-
கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், அ.தி.மு.க. சார்பில், தண்ணீர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே பஸ் நிறுத்த பகுதியில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை, நகர செயலாளர் ராஜேந்திரன் திறந்து வைத்தார். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
தண்ணீர் தொட்டியை
நொறுக்கிய யானை
சத்தியமங்கலம், மே 6-
கடம்பூர் மலை கிராமத்தில் உள்ள மொசல் மடுவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வீட்டின் முன், ௧,௦௦௦ லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு தண்ணீர் தேடி வந்த ஒற்றை யானை, ராஜேந்திரன் வீட்டு முன்பிருந்த தண்ணீர் டேங்க்கை உடைத்து தண்ணீரை குடித்து விட்டு சேதப்படுத்தி சென்றுள்ளது. நேற்று காலை உடைந்து கிடந்த டேங்க்கை பார்த்து அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கணவர் கண்டித்ததால்
மனைவி விபரீத முடிவு
பவானி, மே 6-
அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூர் ரங்கன் காலனியை சேர்ந்த தங்கராஜ், 32; இவரின் மனைவி செல்வி, 28; கூலி தொழிலாளி. ஜம்பை பெரியமோளபாளையத்தில் வசித்து வந்தார்.
செல்போனில் செல்வி அதிக நேரம் பேசியதை கண்டித்த தங்கராஜ், போனை பறித்துக் கொண்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வி, ஜம்பை கழுகு ஏரி எதிரே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள் சடலத்தை மீட்டனர்.