/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி ஆற்றில் சட்ட விரோத தண்ணீர் திருட்டு அதிகரிப்பு 28 கூட்டு குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாயம்
/
பவானி ஆற்றில் சட்ட விரோத தண்ணீர் திருட்டு அதிகரிப்பு 28 கூட்டு குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாயம்
பவானி ஆற்றில் சட்ட விரோத தண்ணீர் திருட்டு அதிகரிப்பு 28 கூட்டு குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாயம்
பவானி ஆற்றில் சட்ட விரோத தண்ணீர் திருட்டு அதிகரிப்பு 28 கூட்டு குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாயம்
ADDED : ஏப் 28, 2024 03:57 AM
பவானி: பவானி ஆற்றில் சட்ட விரோத தண்ணீர் திருட்டு அதிகரித்துள்ளதால், ஆற்றில் இருந்து செயல்படுத்தப்படும், 28 கூட்டு குடிநீர் திட்டங்கள் கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மொத்த உயரம், ௧௦௫ அடி. அணையில் தற்போது, 45.6௨ அடியாக நீர்மட்டம் உள்ளது. நேற்று அணைக்கு, ௧௩௬ கன அடி நீர் வரத்தானது. இதனால் அணையில் இருந்து பாசனத்துக்கு கடந்த, 3ம் தேதியே தண்ணீர் நிறுத்தப்பட்டது. குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் மட்டும், 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர், பவானி ஆற்றில் தளவாய்பேட்டை-வைரமங்கலம் பாலத்தைக் கடந்து செல்லவில்லை. பவானி ஆறு காவிரியில் கலக்கும் கூடுதுறைக்கு முன்பாக, 8 கி.மீ., தொலைவிலேயே நின்று போனது. பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள ஒலகடம் கூட்டுக் குடிநீர் திட்டம், ஜம்பை பேரூராட்சிக்கு தண்ணீர் எடுக்கப்படும் புதை கிணறுகளை சுற்றியும் தண்ணீர் காணப்படவில்லை.
மேலும் காஞ்சிக்கோயில், பெத்தாம்பாளையம், பல்லபாளையம், நல்லாம்பட்டி பேரூராட்சிகள் மற்றும் பெரியபுலியூர் ஊராட்சிக்கு குடிநீர் வழங்கும், நல்லாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்துக்கும் போதிய தண்ணீர் இல்லை. மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து கசிவுநீரை தேக்கி நீரேற்றம் செய்தபோதிலும் போதிய தண்ணீர் இல்லாததால் நேற்று நீரேற்றம் பாதிக்கப்பட்டது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
ஜம்பையில் உள்ள புதைகிணறுக்கு ஆற்றில் பள்ளமான பகுதியில், தேங்கியிருக்கும் தண்ணீர் வரும் வகையில் வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. இதேபோல் பெரியமோளபாளையத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் இல்லை. ஆற்றின் வழியெங்கும் இருகரைகளிலும் விவசாயம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு, குழாய்கள் மூலம் தண்ணீர் திருடப்படுவதே காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பவானிசாகர் முதல் காவிரி ஆறு வரை, 70 கி.மீ., தூரம் பவானி ஆறு சென்று கூடுதுறையில் கலக்கிறது. குடிநீர் தேவைக்கு, 100 கன அடிக்கு குறைவாகவே தண்ணீர் திறந்தாலே போதும். ஆனால், 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், நீர்வரத்து இல்லாமல் போனதற்கு, தண்ணீர் திருட்டே காரணம் என கூறப்படுகிறது. பவானி ஆற்றில் மட்டும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 28 குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. குடிநீருக்கு திறக்கப்படும் தண்ணீர் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதால், குடிநீர் திட்டங்களின் செயல்பாடு கேள்விக்குறியாகும் நிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

