/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காலாவதி உணவு பொருட்கள் விற்பனை ஆவின் அதிகாரிகள் மூவரிடம் விசாரணை
/
காலாவதி உணவு பொருட்கள் விற்பனை ஆவின் அதிகாரிகள் மூவரிடம் விசாரணை
காலாவதி உணவு பொருட்கள் விற்பனை ஆவின் அதிகாரிகள் மூவரிடம் விசாரணை
காலாவதி உணவு பொருட்கள் விற்பனை ஆவின் அதிகாரிகள் மூவரிடம் விசாரணை
ADDED : மே 30, 2024 01:49 AM
ஈரோடு:ஈரோடு அடுத்த சித்தோடில், ஆவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு ஆவின் பால், பதப்படுத்தி பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
தவிர, தயிர், மோர், பிஸ்கட் போன்றவையும் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாக இங்கு தயாரித்து, காலாவதியான பிஸ்கட் பாக்கெட் உட்பட பல்வேறு பொருட்கள், ஆவின் ஸ்டால்களில் விற்கப்படுவதாக, பலரும் குற்றம் சாட்டினர்.
இதன்படி, கடந்த மே 5ல் காலாவதியான ஆவின் பிஸ்கட் பாக்கெட்டுகளை வேனில் ஏற்றி, கோபி, கொடிவேரி ஆவின் ஸ்டால்களில் விற்பனைக்கு வழங்குவதாக, பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் சிவசுப்பிரமணியம், ஆவின், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அலுவலகத்துக்கு புகார் மனு அனுப்பினார்.
அதன்படி, கோபி பஸ் ஸ்டாண்ட், கொடிவேரியில் வேனில் இருந்து இறக்கி, விற்பனைக்கு வைக்கப்பட்ட, 110 ஆவின் பிஸ்கட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். வேனில் இருந்த பெட்டிகளை, அப்படியே ஆவினுக்கு திருப்பி அனுப்பினர்.
இது தொடர்பாக, ஆவின் அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக, உணவு பாதுகாப்பு பிரிவு கடிதம் அனுப்பியது. அதன்படி, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் நேற்று விசாரணை நடத்தினார். சித்தோடு ஆவின் தரக் கட்டுப்பாட்டு மேலாளர் மாலதி, உதவி பொது மேலாளர்கள் பாபு வர்கீஸ், மணிவண்ணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
விசாரணைக்கு, புகார்தாரர் சிவசுப்பிரமணியமும் ஆஜரானார்.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிகுமார் கூறுகையில், “ஆவின் அதிகாரிகளிடம் விசாரித்துள்ளோம். விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும்,” என்றார்.
ஆவின் பொருட்கள் காலாவதியானால், உடனுக்குடன் அவற்றை அழிக்க முடியாது; கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். அதற்காக தனியாக அவற்றை வைத்திருந்த போது, குளறுபடி ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.