/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே தி.மு.க., அரசின் கடமை; அமைச்சர் உதயநிதி
/
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே தி.மு.க., அரசின் கடமை; அமைச்சர் உதயநிதி
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே தி.மு.க., அரசின் கடமை; அமைச்சர் உதயநிதி
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே தி.மு.க., அரசின் கடமை; அமைச்சர் உதயநிதி
ADDED : ஆக 03, 2024 12:53 AM
பவானி:''மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே தி.மு.க., அரசின் கடமை,'' என்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் உதயநிதி பேசினார்.
ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பஞ்சாயத்துக்களுக்கு, 22 கோடி ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஆர்.என்.புதுாரில் நேற்று நடந்தது. அமைச்சர் முத்துசாமி தலைமை, அமைச்சர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.
இரண்டு மாவட்டங்களை சேர்ந்த, 382 பஞ்சாயத்துக்களுக்கு, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள், பல்வேறு துறைகளின் சார்பில், 4,503 பயனாளிகளுக்கு, 22 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
தமிழகம் முழுவதும், 12,525 கிராமங்களில், 86 கோடி ரூபாய் மதிப்பில், விளையாட்டு உபகரணங்களை கொண்டு சேர்க்கும் அடிப்படையில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கி வருகிறோம். இதுவரை, 600க்கும் மேற்பட்டோருக்கு, 14 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 1,800 பயனாளிகளுக்கு இங்கே வீட்டுமனை பட்டா வழங்கியது மிகவும் பெருமையாக உள்ளது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே தி.மு.க., அரசின் கடமை. இவ்வாறு உதயநிதி பேசினார்.
எம்.எல்.ஏ.,வுக்கு பட்டா
ஈரோட்டில் நத்தம் புறம்போக்கில் வசிப்போருக்கு, வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் முதல் பயனாளியாக, ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவன் குடியிருக்கும் வீட்டுக்கு, அமைச்சர் உதயநிதி பட்டா வழங்கினார். முன்னதாக பவானி அருகே ஐ.ஆர்.டி.டி., பொறியியல் கல்லுாரியில், நான் முதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் சார்பில், பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில், 31 பேருக்கு பணி நியமன ஆணைகளை, அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பு
ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார். இளைஞர் நலன், விளையாட்டு, வருவாய், ஊரக வளர்ச்சி துறை என ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்தார். துறைகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணி, பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.
'ஈரோடு மாவட்டம் முதலிடம்'
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணியில் சேர்ந்தவர்களுக்கு, அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, மேட்டுக்கடையில் நேற்று மாலை நடந்தது. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, அடையாள அட்டை வழங்கினார். அவர் பேசுகையில், ''தமிழகத்தில் இல்லம் தோறும் இளைஞரணி சேர்க்கை, ஓராண்டாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம் முதல் மாவட்டமாக உள்ளது,'' என்றார்.