ADDED : ஆக 08, 2024 12:18 AM
ஈரோடு,:சென்னிமலை அருகே, மூன்று கோடி ரூபாய் மதிப்பில், மினி ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து, ஈரோடு கைத்தறி துறை உதவி இயக்குனர் தமிழ்செல்வன் கூறியதாவது:
சென்னையில் நடக்கும் கைத்தறி தின விழாவில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 17 நெசவாளர்களுக்கு, அவர்கள் உருவாக்கிய ஆடைகளின் வடிவமைப்புக்காக, மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு வழங்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 190 கைத்தறி சங்கங்களில், மூன்றை தவிர மற்றவை நன்றாக செயல்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது, 250 கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி துணிகள் இருப்பில் உள்ளன. மாநில அளவில், பள்ளி குழந்தைகளுக்கு தலா, நான்கு இணை சீருடை என்ற கணக்கில், ஐந்து கோடி சீருடைகள் உற்பத்தி செய்வதற்கான ஆர்டரில், ஈரோடு மாவட்டத்தில், 1.50 கோடி ஆடைகள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளன. இந்தாண்டுக்கான குறியீடு முடிக்கப்பட்டுள்ளது.
இலவச வேட்டி, சேலை திட்டத்தில் மாநில அளவில், 1.70 கோடி வேட்டி, 1.70 கோடி சேலைகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்படும். அதில், 65 லட்சம் வேட்டிகள், 65 லட்சம் சேலைகள் ஈரோடு மாவட்டத்தில் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அரசிடம் இருந்து நுால் பெறுவதற்கான ஆணைகள் வந்ததும், இலவச வேட்டி, சேலை உற்பத்தி துவங்கும்.
ஒவ்வொரு ஆண்டும், புதிய நெசவாளர்களுக்கு கைத்தறி துறை சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன்படி, நடப்பாண்டில், 40 பேருக்கு கைத்தறி நெசவு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான பணிகள் மேற்கொள்ளும் வகையில், ஈரோடு மாவட்டத்தில், ஒரு மெகா ஜவுளி நெசவாளர்கள் கொண்ட, 'கிளஸ்டர்' உருவாக்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு கிராமத்தில், அரசு நிலம், 1.5 ஏக்கர் வழங்கப்பட்டுள்ளது. அங்கு, மூன்று கோடி ரூபாய் மதிப்பில், மினி ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டு காலத்துக்குள் பணிகள் முடிய வாய்ப்புள்ளது. இங்கு, 100 கைத்தறி தறிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.