/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உபரி நீருக்காக காத்திருந்தோம் அமைச்சர் முத்துசாமி விளக்கம்
/
உபரி நீருக்காக காத்திருந்தோம் அமைச்சர் முத்துசாமி விளக்கம்
உபரி நீருக்காக காத்திருந்தோம் அமைச்சர் முத்துசாமி விளக்கம்
உபரி நீருக்காக காத்திருந்தோம் அமைச்சர் முத்துசாமி விளக்கம்
ADDED : ஆக 18, 2024 02:51 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயன்பாளையம் அணைக்கட்டில், அத்திக்கடவு - அவிநாசி திட்ட துவக்க விழாவில் பங்கேற்ற, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
கொரோனா கட்டுக்குள் வந்ததும், ஒவ்வொரு துறையாக முதல்வர் ஆய்வு செய்த போது, இத்திட்டத்தில் ஒன்று முதல் மூன்றாவது நீரேற்று நிலையம் வரை குழாய் கொண்டு செல்ல நிலம் கையகப்படுத்தாதது தெரியவந்தது.
ஒவ்வொரு விவசாயி வீட்டுக்கும் சென்று பேசி, நிலம் வழங்க சம்மதம் பெற்றோம். அதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது. இதற்கிடையில் குழாய் பதித்த இடங்களில் உடைப்பு, கசிவு, சீரமைப்பில் தாமதமானது.
அதன் பின் உபரி நீர் வரவில்லை. குறைந்த உபரி நீரை வைத்து, 83 பீடர் லைனில் மட்டும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 980 கி.மீ., துாரம் கொண்ட பீடர் லைன் மூலம், 1,045 ஏரி, குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.
சோதனை ஓட்டத்தின் போதும், குழாய் உடைந்ததால், இரவு, பகலாக உடைப்பு சரி செய்யப்பட்டது. அதற்குள் உபரி நீர்வரத்து குறைந்து, முழு சோதனை ஓட்டம் நடத்த முடியவில்லை. இவற்றை உறுதி செய்ய கால அவகாசம் தேவைப்பட்டது.
உபரி நீர் வராமல், பணிகளை முழுமையாக முடிக்காமல், பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறுவது போல, திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், 'இத்திட்டம் தோல்வி' என, அரசை அவர் குறை கூறியிருப்பார். உபரி நீர் வராமல் எப்படி திட்டத்தை செயல்படுத்த இயலும்.
கடந்த, 4, 5 நாட்களாக, 1,000 கனஅடிக்கு மேல் உபரி நீர் வந்தது. நேற்று 1,000 கனஅடிக்குள் குறைந்துள்ளது. இத்திட்டத்துக்கு முழுமையாக தண்ணீர் வழங்க, ஆற்றில் உபரி நீரோடு, கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீரும் சேர்ந்தால் எளிதாக நிறைவேற்ற இயலும் என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த, 15ல் கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, 15 நாட்களுக்குள் கசிவு நீர், இத்திட்டத்துக்கு பலன் தரத் துவங்கும். இதன்படி அத்திடக்கடவு திட்டத்துக்கு, 70 நாட்களுக்கு, 1.50 டி.எம்.சி., நீர் வழங்க முடியும் என, முதல்வரிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளோம்.
இதன்படியே முதல்வர் திட்டத்தை திறந்து வைத்துள்ளார். இத்திட்டத்தை செயல்படுத்த அரசு ஒரு நாள் கூட வீணடிக்கவில்லை. இத்திட்டம் கொண்டு வர முதன்முதலில், முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் சிந்தித்து செயல் வடிவம் கொடுத்தார்.
இதை அரசியலுக்காக கூறவில்லை. பா.ஜ., போராட்டம் அறிவித்ததால் தான் இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறி உள்ளார். அது மிகவும் தவறானது. உபரி நீர் வந்ததால் தான் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. உபரி நீருக்காக திட்டம் தயார் நிலையில் காத்திருந்ததை அண்ணாமலை உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

