/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடுமுடி, கூடுதுறையில் களை கட்டிய ஆடி அமாவாசை வழிபாடு
/
கொடுமுடி, கூடுதுறையில் களை கட்டிய ஆடி அமாவாசை வழிபாடு
கொடுமுடி, கூடுதுறையில் களை கட்டிய ஆடி அமாவாசை வழிபாடு
கொடுமுடி, கூடுதுறையில் களை கட்டிய ஆடி அமாவாசை வழிபாடு
ADDED : ஆக 05, 2024 01:52 AM
கொடுமுடிஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், நன்மை கிடைக்கும் என்பதால், ஆடி அமாவாசை தினமான நேற்று, அதிகாலை முதலே பக்தர்கள் மற்றும் மக்கள், கொடுமுடிக்கு வரத்தொடங்கினர்.
காவிரி கரையில் மாது, பிதுர் தோஷ நிவர்த்தி பரிகாரம், முன்னோர் செய்த பாவம், முன் ஜென்ம சாப தோஷம் உள்ளிட்ட தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் மற்றும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து வழிபட்டனர். காவிரியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவில் முன் பகுதியில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பின் மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாளை தரிசனம் செய்தனர்.
சென்னிமலையில்...
ஆடி மாதம் பக்திக்கு முக்தி தரும் மாதமாக கருதப்படுகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயண புண்ணிய காலமாகும். இது தேவர்களுக்கு இரவு தொடங்கும் நேரமாக கருதப்படுகிறது. இதனால் ஆடி மாத அமாவாசை சிறப்பாக போற்றப்படுகிறது. இந்த நாளில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வேண்டினால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதனால் சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று அதிகாலை முதலே கூட்டம் காணப்பட்டது. கோபூஜை, அபிேஷகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலை வரை தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்தும் கும்பல் கும்பலாக பக்தர்கள் வந்தபடியே இருந்தனர். பொது தரிசனத்தில் பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ஈரோட்டில்...
ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவில், ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை, தீபாராதனை
நடந்தது.
வீரப்பன்சத்திரம் காவிரி ரோட்டில் உள்ள சின்னமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அசோகபுரம் மழை மாரியம்மன், முத்தம்பாளையம் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்
பாலித்தனர்.
கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில், ஈரோடு -சத்தி ரோட்டில் உள்ள எல்லை மாரியம்மன் கோவில், சூரம்பட்டி பகுதியில் உள்ள மகாளியம்மன் கோவில் உள்பட மாநகர் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஈரோடு வ.உ.சி., பூங்காவுக்கும் ஏராளமானோர் வந்தனர். குழந்தைகள் ஊஞ்சலாடியும் சறுக்குகளில் ஏறி விளையாடியும்
குதுாகலித்தனர்.
கால்வாய் பகுதியில் தர்ப்பணம்
ஈரோடு கருங்கல்பாளையம் காலிங்கராயன் கால்வாய்
பகுதியில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதலே குவிந்தனர். கால்வாயில் நீராடிய பின், முன்னோர்களுக்கு எள் மற்றும் தண்ணீரை கொண்டு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டனர்.
கூடுதுறையில்
குவிந்த பக்தர்கள்
மூன்று நதிகள் சங்கமிக்கும்
பவானி கூடுதுறைக்கு, ஆடி அமாவாசையை ஒட்டி, உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே பக்தர்கள் வரத் தொடங்கினர்.
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால், கூடுதுறை படித்துறை, பரிகார மண்டபத்தை தொட்டு செல்கிறது. படித்துறைகளில் நீராட
பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலுக்கு வந்தவர்கள் 'ஷவர்களில்' குளித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
திதி, தர்ப்பணம் செய்ய வந்திருந்தவர்கள், சடங்குகள் செய்து, ஆற்றில் பாதுகாப்புடன் ஒருவர்பின் ஒருவராக, பிண்டம் கரைத்து முன்னோர்களை வழிபட்டனர்.
பவானி டிஎஸ்பி., அமிர்தவர்ஷினி தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பில் ஈடுபட்டனர்.