/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிற பணிகளில் ஈடுபடுத்தும் அதிகாரிகள் மக்களை தேடி மருத்துவ பணியாளர் குமுறல்
/
பிற பணிகளில் ஈடுபடுத்தும் அதிகாரிகள் மக்களை தேடி மருத்துவ பணியாளர் குமுறல்
பிற பணிகளில் ஈடுபடுத்தும் அதிகாரிகள் மக்களை தேடி மருத்துவ பணியாளர் குமுறல்
பிற பணிகளில் ஈடுபடுத்தும் அதிகாரிகள் மக்களை தேடி மருத்துவ பணியாளர் குமுறல்
ADDED : ஆக 06, 2024 01:38 AM
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 'மக்களை தேடி மருத்துவம் திட்டம்' துவங்கி, நான்காமாண்டு விழாவை முன்னிட்டு, முகாம் ஏற்பாடு செய்திருந்தனர். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முகாமை துவக்கி வைத்து, மக்களை தேடி மருத்துவ வட்டார வாகன அணிவகுப்பை துவக்கி வைத்தார். சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். முகாமில், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் பரிசோதனை செய்து, மருந்துகள் வழங்கினர்.
மாவட்டத்தில் இதுவரை, 18.22 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டு, 3.06 லட்சம் பேருக்கு ரத்த கொதிப்பு, 1.37 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சை
வழங்கப்படுகிறது.
வலி நிவாரண சிகிச்சை, 8,607 பேருக்கும், இயன்முறை சிகிச்சை, 26,160 பேருக்கும் வழங்கப்படுகிறது. கருப்பை வாய் புற்றுநோய், 1.16 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ததில், 457 பேருக்கு உறுதி செய்து சிகிச்சை வழங்கப்படுகிறது. மார்பக புற்றுநோய் பரிசோதனை, 2.43 லட்சம் பேருக்கு மேற்கொண்டு, 551 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
முகாமில் பங்கேற்ற மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் கூறியதாவது:
எங்களுக்கு தினமும், 2 மணி நேர பணி எனக்கூறி, 5,500 ரூபாய் ஊதியம் வழங்குகின்றனர். நிரந்தர பணி செய்யும் செவிலியர்களைப்போல, 10 மணி நேரம் பணி செய்கிறோம். செவிலியர், பிற சுகாதாரப்பணியாளர்களின் பணிகளையும் செய்ய வலியுறுத்துகின்றனர். அதற்கு டூவீலர், பெட்ரோல் அலவன்ஸ் வழங்குவதில்லை.
ஏற்கனவே ஒவ்வொரு பணியாளரும், 5 முதல், 14 கிராமங்கள் வரை பயனாளிகளுக்கு பரிசோதனை, மருந்துகள், கணக்கெடுப்பு செய்கிறோம். தற்போது பிற துறை பணி, சுகாதாரத்துறையின் அறிவிப்பையும் எங்கள் மூலம் செய்ய வைக்கின்றனர்.
சர்க்கரை பரிசோதனைக்கான கருவிகள், ஊசி முழுமையாக வழங்குவதில்லை. ரத்த அழுத்தம் பார்க்கும் கருவியில் பெரும்பாலானவை பழுதாகியும், சார்ஜ் நிற்காமலும் போவதால், சிரமப்படுகிறோம். இவ்வாறு கூறினர். நேற்றைய முகாமிலும் பல ரத்த அழுத்த கருவிகள் முறையாக செயல்படவில்லை. ரத்த பரிசோதனைக்கான ஊசி இல்லாததால், பிற முகாமில் பரிசோதிக்க அனுப்பி
வைத்தனர்.