/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குவாரியால் மாசுபாடு அதிகரிப்பு அனுமதியை நீட்டிக்க எதிர்ப்பு
/
குவாரியால் மாசுபாடு அதிகரிப்பு அனுமதியை நீட்டிக்க எதிர்ப்பு
குவாரியால் மாசுபாடு அதிகரிப்பு அனுமதியை நீட்டிக்க எதிர்ப்பு
குவாரியால் மாசுபாடு அதிகரிப்பு அனுமதியை நீட்டிக்க எதிர்ப்பு
ADDED : ஆக 29, 2024 01:40 AM
குவாரியால் மாசுபாடு அதிகரிப்பு
அனுமதியை நீட்டிக்க எதிர்ப்பு
ஈரோடு, ஆக. 29-
பெருந்துறை, சிங்காநல்லுாரில் கிரானைட் குவாரியின் ஒப்பந்த காலம் முடிந்ததால், அதற்கு மீண்டும் அனுமதி வழங்கக்கூடாது. குவாரியால் மாசுபாடு அதிகரித்துள்ளது என விவசாயிகள், கிராம மக்கள் மனு வழங்கினர்.
இதுபற்றி, தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி செங்கோட்டையன், ஈரோடு ஆர்.டி.ஓ.,விடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
பெருந்துறை தாலுகா சிங்காநல்லுார் கிராமத்தில், 11 ஏக்கரில் கிரானைட் குவாரி உள்ளது. கடந்த சில ஆண்டாக இயங்கி வந்த இந்த சுரங்கத்தின் ஒப்பந்தம் நிறைவடைந்தது. தற்போது, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து கடந்த, 20ல் சிங்காநல்லுார் கிராமத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. கூட்டத்தில் குவாரி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வெளியூர் நபர்கள், குவாரிக்கு ஆதரவாக பேசினர். தங்களது வாழ்வாதாரம் என்றும், தங்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோகும் என பேசினர்.
குவாரி, சிறு கனிம சுரங்க விதிப்படி செயல்படவில்லை. இங்கு, வடமாநில தொழிலாளர்கள், 50க்கும் மேற்பட்டோர் பணி செய்கின்றனர். அவர்கள், குவாரி அருகேயே வசித்து கொண்டு பணி செய்கின்றனர். எனவே குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது.
நீரோடும் வாய்க்காலுக்கு, 50 மீட்டருக்குள் சுரங்கம் அமைக்கக்கூடாது என விதி உள்ளது. கீழ்பவானி வாய்க்காலுக்கு, 20 மீட்டருக்குள் இக்குவாரி உள்ளது. தவிர உயர் மின்னழுத்த பாதையும் செல்கிறது.
குவாரியில் பாறைகள் உடைக்க வெடி பொருட்கள் பயன்படுத்தும் சத்தம் அதிகமாக கேட்பதால், ஆடு, மாடுகள் சினை பிடிப்பதில்லை. குடிநீர் பாதிக்கிறது. குவாரியில் இருந்து வெளியேறும் மாசால் சுவாசம், கண் எரிச்சல் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, குவாரிக்கான ஒப்பந்தத்தை மீண்டும் நீட்டித்து அனுமதி வழங்கக்கூடாது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

