/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகர், மாவட்டத்தில் பரவலான மழையால் ஆறுதல்
/
மாநகர், மாவட்டத்தில் பரவலான மழையால் ஆறுதல்
ADDED : மார் 12, 2025 08:11 AM

ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், பரவலாக மழை பெய்ததால், வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம் தணிய, மக்கள் ஆறுதல் அடைந்தனர்.
ஈரோடு மாநகரில் கடந்த மாத இறுதியில் இருந்தே வெயில் சுட்டெரிக்க துவங்கியது. கடந்த ஐந்து நாட்களாகவே, 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். நண்பகல், 12:00 மணி முதல் மாலை, 4:30 மணி வரை வெளியில் அனாவசியமாக நடமாடுவதை நிறுத்தி விட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் வெயிலும் சற்று குறைந்து காணப்பட்டது. புழுக்கமாக இருந்ததால் மக்கள் வியர்வையில் நனைந்தனர். இதனால் மழையை எதிர்பார்த்தனர். இந்நிலையில் மதியம், 3:00 மணிக்கு லேசான சாரல் மழை பெய்தது. பின்னர் வேகம் படிப்படியாக அதிகரித்தது. மாலை, 4:40 மணிக்கு பின் பரவலாக, அதேசமயம் சற்று கனமழையாக கொட்டியது. 40 நிமிடங்கள் வரை நீடித்தது. மழையால் பிரதான சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக வீரப்பன்சத்திரம், ஆர்.கே.வி. சாலை, சென்னிமலை சாலைகளில் குளம்போல் தேங்கிய மழை நீரால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து இதமான சூழல் நிலவியது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
* சென்னிமலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 4:௦௦ மணியளவில் பலத்த இடியுடன் துாறல் மழை, ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்தது.
* அந்தியூரில் மாலை, 4:௦௦ மணிக்கு தொடங்கிய மிதமான மழை, ௪:௨௦ மணி வரை பெய்தது. இதேபோல் தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பிபாளையம், புதுப்பாளையம், மூலக்கடை, மாத்துார் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
* பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான லட்சுமிநகர், காளிங்கராயன்பாளையம், மூலப்பாளையம், காடையம்பட்டி, தொட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது.
* சத்தியமங்கலத்தில் காலை முதல் மதியம் வரை லேசான வெயில் அடித்த நிலையில், மாலை, 4:15 மணிக்கு மழை பெய்தது. 5 நிமிடம் பெய்து நின்றது. பிறகு, 5:20 மணிக்கு மீண்டும் தொடங்கி, 5:35 மணிக்கு நின்றது. இந்த மழையால் புழுக்கம் அதிகரித்து, மக்கள் அவதிப்பட்டனர். ஆசனுார் பகுதியில் மாலை, 4:00 மணிக்கு தொடங்கிய சாரல் மழை மாலை வரை நீடித்தது.
* கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதியில், நேற்று மாலை, 4:00 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. வெகுநேரம் பெய்யும் என எதிர்பார்த்த நிலையில், ௫ நிமிடத்தில் நின்று விட்டது. அதேசமயம் குளிர்காற்று வீசியதால், புழுக்கம் இல்லாத நிலை ஏற்பட்டது.
* புன்செய் புளியம்பட்டியில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளிலும் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.
பலத்த காற்றால் விழுந்த புளியமரம்
அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை, 4:00 மணிக்கு தொடங்கிய கனமழை, 4:35 மணி வரை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இதனால் மேட்டூர் - பவானி சாலையில் ஊமாரெட்டியூர் பிரிவு அருகே, ராட்சத புளியமரம் வேருடன் பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நிருபர் குழு