ADDED : மே 16, 2024 04:26 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட, சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதை அடுத்து, பொக்லைன் இயந்திர உதவியுடன், அதிகாரிகள் துார்வாரினர்.
ஈரோடு மாநகர பகுதிகளில் இரு நாட்களுக்கு முன்பாக, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. 40 நிமிடங்களுக்கு மேலாக பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. குறிப்பாக, 18வது வார்டு நேதாஜி நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீருடன் மழை நீர் தேங்கி நின்றது. அப்பகுதியினர், 2வது மண்டல அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
அதன்படி சாக்கடை கால்வாய்களை, பொக்லைன் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் துார்வாரினர். மேலும், கழிவு நீர் செல்லும் வகையில், மாணிக்கம்பாளையம் சாலையோரத்தில் மண்ணை அள்ளி, தற்காலிக கால்வாய் அமைத்தனர். பின்னர், பிளாஸ்டிக், குப்பையை சாக்கடை கால்வாயில் வீச வேண்டாம் என, அப்பகுதியினருக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தினர்.