/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உயருகிறது அமராவதி அணை நீர்மட்டம் வாய்க்கால்களை துார்வார எதிர்பார்ப்பு
/
உயருகிறது அமராவதி அணை நீர்மட்டம் வாய்க்கால்களை துார்வார எதிர்பார்ப்பு
உயருகிறது அமராவதி அணை நீர்மட்டம் வாய்க்கால்களை துார்வார எதிர்பார்ப்பு
உயருகிறது அமராவதி அணை நீர்மட்டம் வாய்க்கால்களை துார்வார எதிர்பார்ப்பு
ADDED : மே 18, 2024 01:19 AM
கரூர்: அமராவதி அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், கரூரில் பிரதான வாய்க்கால்களை, துார் வார வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில், கேரளா மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டையில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம், 36.58 அடியை தாண்டிய நிலையில் உள்ளது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி ஆற்றின் பிரதான வாய்க்காலை துார் வார வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கரூரில், அமராவதி ஆற்றின் பிரதான வாய்க்காலாக திருமாநிலையூர் வாய்க்கால் மற்றும் பள்ளப்பாளையம் ராஜவாய்க்கால் உள்ளன. அதன் மூலம், 30 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக சரிவர வாய்க்கால்கள் துார்வாரப்படவில்லை. வாய்க்கால் தெரியாத அளவுக்கு செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. தண்ணீர் திறப்புக்கு முன், வாய்க்கால்களை துார் வார வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான், அமராவதி ஆறு, காவிரியாற்றில் கலக்கும் கடைமடை பகுதிகளான திருமாக்கூடலுார் மற்றும் மணவாசி வரை தண்ணீர் செல்லும்.
வரும், ஜூலை மாதத்தில் அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்தால், நகர பகுதிக்குள் தண்ணீர் புகுந்துவிடும். எனவே, திருமாநிலையூர் வாய்க்கால், பள்ளப்பாளையம் ராஜவாய்க்கால் முழுவதும், போர்க்கால அடிப்படையில் துார் வார வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

