/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ. 28 லட்சம் மோசடி கைப்பந்து வீரர் கைது
/
ரூ. 28 லட்சம் மோசடி கைப்பந்து வீரர் கைது
ADDED : மே 02, 2024 02:51 AM

காங்கேயம்:ஈரோடு மாவட்டம், கரட்டுப்பாளையம் உடையார் வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 37. மொடக்குறிச்சி அரசு அறிவியல் கலை அறிவியல் கல்லுாரியில் உடற்கல்வி பயிற்சியாளராக பணிபுரிகிறார். இவருக்கும், வெள்ளக்கோவிலை சேர்ந்த மாநில கைப்பந்து விளையாட்டு வீரர் ஹரிஹரன், 31, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சென்னையில் இந்தியன் வங்கியில் வேலை செய்து வந்த ஹரிஹரன், தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ளார்.
பாலமுருகனின் மைத்துனர் பூவேந்திரன், சிவில் இன்ஜினியரிங் படித்து விட்டு, வேலை தேடி வந்தார். இதையறிந்த ஹரிஹரன், '30 லட்சம் ரூபாய் கொடுத்தால் மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருகிறேன்' என ஆசை வார்த்தை கூறினார்.
அதை நம்பிய பாலமுருகன், பணத்தை இரண்டு தவணைகளாக கொடுத்தார். அவரின் தாய், தந்தை மற்றும் சகோதரி, கண்டிப்பாக வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் இரு ஆண்டுகளாகியும் வேலை வாங்கித் தரவில்லை.
இதுபோல, காங்கேயம், கே.ஜி., நகரைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடமும், மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக, எட்டு லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியது போலீசார் விசாரணையில் தெரிந்தது. பாலமுருகன் கொடுத்த புகார்படி, வெள்ளகோவில் போலீசார் விசாரித்து ஹரிஹரனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவருடைய தந்தை, தாய், தங்கையை தேடுகின்றனர்.

