/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொளுத்தும் வெயில்: ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்
/
கொளுத்தும் வெயில்: ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்
ADDED : மே 01, 2024 08:34 PM
ஈரோடு:தமிழகத்தில், கடுமையான வெயிலால் ஜவுளி சந்தையில் காட்டன் துணிகள் தவிர மற்ற ஜவுளிகள் விற்பனை மந்தமாகவே உள்ளது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, கனி மார்க்கெட், சென்ட்ரல் தியேட்டர் பகுதி, டி.வி.எஸ்., வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை ஜவுளி சந்தை விற்பனை நடந்தது.
தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹராஷ்டிரா, ஓரிசா போன்ற மாநில வியாபாரிகள் வந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் ஜவுளிகள் வாங்கி சென்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணம் இன்றி, 50,000 ரூபாய்க்கு மேல் பணமாகவோ, ஜவுளி உள்ளிட்ட பொருளாகவே எடுத்து செல்ல முடியாமல் கட்டுப்பாடு நிலவியது. தற்போது, கட்டுப்பாடுகள் தளர்வு பெற்றதால், வியாபாரிகள் வருகை அதிகரித்தது.
இதுபற்றி, ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:
தேர்தல் முடிந்ததால், வியாபாரிகள், கடைக்காரர்கள் வரத் துவங்கி உள்ளனர். சில்லறை விற்பனையாக காட்டன் துணிகள், உள்ளாடைகள், துண்டு, லுங்கி, வேட்டி, நைட்டி, டிரவுசர்கள் போன்றவை அதிகமாக விற்பனையானது.
தற்போது பண்டிகை ஏதும் இல்லாததால், மொத்த விற்பனை மந்தமானது. ஆடி மாதம் வரும்போது, தள்ளுபடி விற்பனை துவங்கும். அதுவரை இதேபோன்ற நிலையே நீடிக்கும்.
இவ்வாறு கூறினர்.

