/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகன் சாவில் சந்தேகம்: போலீசில் பெற்றோர் புகார்
/
மகன் சாவில் சந்தேகம்: போலீசில் பெற்றோர் புகார்
ADDED : ஆக 22, 2024 01:23 AM
ஈரோடு, ஆக. 22-
ஈரோடு அருகே, மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக, போலீசில் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு, மரப்பாலம் ஆலமரத்து வீதியை சேர்ந்த பூபதி மகன் கிருஷ்ணமூர்த்தி, 29, பெயின்டர். கடந்த, 19 மதியம் 2:00 மணிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் சவுந்திரராஜனுடன் காரை வாய்க்கால் காளிங்கராயன் வாய்க்காலில் குளிக்க சென்றார். வாய்க்கால் தண்ணீரில் நீந்தியவாறு, முனிசிபல் சத்திரம் முனியப்பன் கோவில் படிக்கட்டில் ஏறி, சவுந்திரராஜனிடம் வீட்டுக்கு செல்வதாக கையை காட்டியுள்ளார். ஆனால் வீட்டுக்கு வரவில்லை. காணாமல் போன மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என, தாய் ராசாத்தி நேற்று முன்தினம் சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இந்நிலையில், நேற்று காலை மலையம்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கருமாண்டாம்
பாளையம் காளிங்கராயன் வாய்க்காலில், கிருஷ்ணமூர்த்தியின் உடல் நீரில் மிதந்தது. மலையம்பாளையம் போலீசார் அடையாளம் கண்டு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின், பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் மணிகண்டன், 25, மரப்பாலம் பெரும்பள்ளம் ஓடை பாலத்தின் கீழே சடலமாக கடந்த 2023 டிச.,9ல் கண்டெடுக்கப்பட்டார். ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர் மீது சூரம்பட்டி போலீசில் கொலை மிரட்டல், திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்நிலையில்தான், கிருஷ்ணமூர்த்தியும் நீரில் மிதந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எட்டு மாதங்களில் மற்றொரு மகனும் இறந்ததால், சாவில் மர்மம் இருப்பதாக கிருஷ்ண மூர்த்தியின் பெற்றோர், உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.