/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜவுளித்துறையில் தமிழகம் முதலிடம் பெற விசைத்தறி சங்க கூட்டமைப்பு செயலர் 'ஐடியா'
/
ஜவுளித்துறையில் தமிழகம் முதலிடம் பெற விசைத்தறி சங்க கூட்டமைப்பு செயலர் 'ஐடியா'
ஜவுளித்துறையில் தமிழகம் முதலிடம் பெற விசைத்தறி சங்க கூட்டமைப்பு செயலர் 'ஐடியா'
ஜவுளித்துறையில் தமிழகம் முதலிடம் பெற விசைத்தறி சங்க கூட்டமைப்பு செயலர் 'ஐடியா'
ADDED : ஏப் 25, 2024 02:25 AM
ஈரோடு:தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் கந்தவேல், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் விசைத்தறியாளர் நலன் கருதி இலவச மின்சாரம், 750 யூனிட்டில் இருந்து, 1,000 யூனிட்டாக கடந்த மார்ச்சில் தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டத்தால், 1.68 லட்சம் நெசவாளர்கள் பயன் பெறுகின்றனர்.
தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள, 238 கூட்டுறவு விசைத்தறி நெசவாளர் சங்கங்களில், 68,000 விசைத்தறிகளுக்கு, 6 மாத கால வேலைவாய்ப்பாக இலவச வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடை, கேஷ்மேட் ரக உற்பத்திக்கு அனுமதி வழங்குகிறது. 3.50 கோடி மீட்டர் சந்தனம் மற்றும் பச்சை நிற மேல் சட்டை சீருடைகள், டிரில் எனப்படும் துணி வகைகள் தற்போது வரை ஆட்டோலுாமில் உற்பத்தி செய்யப்படுகிறது.
பள்ளி சீருடைகள் அனைத்தும், விசைத்தறியில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என்ற ஆணையை பிறப்பிக்கும் பட்சத்தில் மேலும், இரு மாதங்களுக்கு நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கடந்த மார்ச்சில், கருமத்தம்பட்டியில் நடந்த தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நன்றி அறிவிப்பு விழாவில், 'வரும் காலங்களில் தமிழக அரசின் அனைத்து வகை சீருடைகள், துணி உபகரணங்கள் விசைத்தறியில் மட்டுமே உற்பத்தி செய்ய வழி வகை செய்யப்படும்' என, முதல்வர் உறுதியளித்திருந்தார்.
இந்த உறுதி மொழி, நெசவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வாக்குறுதியை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட, நெசவாளர்கள் குறித்த கணக்கெடுப்பை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்.
இ - மார்க்கெட் செயலியை உருவாக்க வேண்டும். இந்த செயலி முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது, நாட்டில் ஜவுளித்துறையில் தமிழகம் தான் முதலிடத்தை வகிக்கும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

