/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2 நாட்களே உள்ளதால் சூடுபிடித்த பிரசாரம்
/
2 நாட்களே உள்ளதால் சூடுபிடித்த பிரசாரம்
ADDED : ஏப் 16, 2024 01:35 AM
ஈரோடு;ஓட்டுப்பதிவுக்கு இன்னும், 3 நாட்களே உள்ள நிலையில் தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சியினர் தரப்பிலும் வீடுவீடாக சென்று நோட்டீஸ், பூத் சிலிப் வழங்குதல் என சுறுசுறுப்படைந்துள்ளனர்.
மார்ச், 15ல் தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும், 19 ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இறுதி கட்டத்தை எட்டிய தேர்தல் பிரசாரம், நாளை மாலையுடன் நிறைவடையும். முழுமையாக இன்று, நாளை மட்டுமே உள்ளது. இதனால் தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்கள் தரப்பிலும், கடுமையாக சுழல துவங்கி உள்ளனர்.
கடந்த இரு நாட்களாக ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர்கள், வெளியூரில் வசிப்பவர்கள், வேலைக்காக சென்று வருபவர்கள், ஓட்டுப்பதிவு நாளில் வருவார் அல்லது வர இயலாது, இறந்தவர்கள் விபரம் வரை சேகரித்துள்ளனர். வார்டு மற்றும் கிளை வாரியாக, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஓட்டுக்கள், புதிதாக சேர்க்க வேண்டியது, நீக்க வேண்டிய விபரம் வரை பதிவு செய்துள்ளனர்.
இன்று முதல் காலை, மாலையில் வீடுவீடாக சென்று வாக்காளர் சந்திப்பு, கட்சி சார்பிலான பூத் சிலிப் வழங்குதல், ஓட்டுச்சாவடிக்கு வர இயலாதவர்கள் விபரம் இருந்தால் அவற்றையும் சேகரித்து, கூடுதலாக சில ஓட்டுக்களை பதிவாக செய்யும் முயற்சியில் ஈடுபடுவர். இதனால் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் உச்சக்கட்ட சுறுசுறுப்புக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

