/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'மானிட உறவின் மாண்பால் பிறக்கும் நட்பு உயர்ந்தது'
/
'மானிட உறவின் மாண்பால் பிறக்கும் நட்பு உயர்ந்தது'
ADDED : ஆக 04, 2024 01:54 AM
ஈரோடு,ஈரோடு சி.என்.கல்லுாரி வளாகத்தில் நடக்கும் ஈரோடு புத்தக திருவிழாவில், இரண்டாவது நாளான நேற்று, 'நாடகமும் தமிழிசையும்' என்ற தலைப்பில், டி.கே.எஸ்.கலைவாணன் பேசியதாவது:
நாடகங்களில் பிற மொழி பாடல்களையே பாடினர். தமிழில் பாடல்கள் இல்லை என்றனர். ராஜா அண்ணாமலை செட்டியார் முயற்சியில், நாடகங்களில் தமிழ் பாடல்கள் அதிகம் பாடத்துவங்கினர். 'திருப்புகழை பாடினால் திக்குவாயும் பாடும்' என்பதை நிரூபிக்கும்படி பாடல்கள் பாடப்பட்டன. நாடக கலைஞர்கள் பாடும் பாடலை கேட்க, சங்கீத வித்வான்கள் முதல் வரிசையில் அமர்ந்து கவனிக்கும் அளவுக்கு மாறியது.
நாடக கலைஞர்கள், தமிழில் பாடி, தமிழையும் வளர்த்தனர். அவ்வாறு பாஸ்கரதாஸ், சங்கரதாஸ், முத்துசாமி கவிராயர், எஸ்.வி.சுப்பையா பாகவதர், லட்சுமணதாஸ், உடுமலை நாராயண கவி என பலரும் பாடலுடன், தமிழில் நாடகங்களை வடித்தனர் என்றார்.
'நண்பெனும் நாடாச் சிறப்பு' என்ற தலைப்பில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேசியதாவது:
உயிர்கள் உலகுக்கு, 4 வழிகளில் வரும். கர்ப்பப்பையில் தோன்றி பிறப்புறுப்பு வழியாகவும், முட்டையில் தோன்றியும், விதையில் முளைத்தும், கிருமி - ஈசல் போன்று பூமியின் சூட்டில் சில வினாடி நேரத்தில் பிறக்கும். உடல் சூட்டில் பேன் கூட, பிறக்கும். அதுபோல உறவுகள், தாய்-தந்தை மூலம் பிறந்து ரத்த உறவுகளாகும். மனிதர்களால் இணைத்து கணவன் - மனைவியாகும். பெற்றோரை தேர்வு செய்யும் உரிமை, உடன் பிறப்போரை தேர்வு செய்யும் உரிமை நமக்கில்லை. இயற்கையாக தோன்றும் உறவை பிரித்து வைக்கும் சக்தி எந்த சட்டத்துக்கும் கூட இல்லை. ஆனால், மனிதர்களால் சேர்த்து வைக்கப்படும் கணவன் - மனைவி உள்ளிட்ட உறவுகள் பிரியலாம். சட்டத்திலும் வழிகள் உண்டு.
இவை இரண்டுக்கும் மேலாக 'மானிட உறவின் மாண்பால் பிறக்கும் நட்பு' உயர்ந்தது. கண்ணால் காணாத நட்புகள் உண்டு. நல்ல நண்பர்கள் சந்திக்க வேண்டும் என்றில்லை என்பார்கள். அதற்கு உதாரணமாக கோப்பெருஞ்சோழன் - பிசுராந்தையார், போஜராஜன் - காளிதாசன், அவ்வை - அதியமான் என சொல்லி கொண்டே போகலாம். அன்பில் இருந்து அன்புதான் பிறக்கும். 'உடுக்கை இழந்தன் கைபோல' என்ற குறளுக்கு ஏற்ப, நண்பனுக்கு துன்பம் என்றதும் உதவும் நடப்பே உயர்வானது.
இவ்வாறு பேசினார்.