/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அதிகாலை வரை வந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
/
அதிகாலை வரை வந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ADDED : ஏப் 21, 2024 02:00 AM
ஈரோடு:ஈரோடு
லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளில், 1,688
ஓட்டுச்சாவடிகளில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்,
கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் நேற்று முன்தினம்
ஓட்டுப்பதிவுக்கு பின், இரவு, 8:00 மணி முதல் சித்தோடு அரசு
பொறியியல் கல்லுாரிக்கு வரத்துவங்கியது.
ஈரோடு கிழக்கு,
மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம், குமாரபாளையம்
சட்டசபை தொகுதிகளில் இருந்து இ.வி.எம்.,களுடன் வரப்பெற்ற லாரிகளை,
கல்லுாரியின் பின்புறம் வரிசைப்படுத்தி, தொகுதி வாரியாக
அனுப்பினர். ஒவ்வொரு தொகுதியிலும், ஓட்டுச்சாவடி எண் வாரியாக,
கட்டம் போடப்பட்டிருந்த இடத்தில், 3 இயந்திரங்களையும் மண்டல
அலுவலர்கள் ஒப்படைத்து, வெளியேறினர். காங்கேயம், தாராபுரம்,
குமாரபாளையத்தில் இருந்து பெட்டிகள் வர தாமதமானது. அவையும
ஒருவழியாக வந்து சேர, அதிகாலை, 4:00 மணிக்கு அனைத்து இ.வி.எம்.,களையும்
அதற்கான இடத்தில் வைக்கப்பட்டன.
காலை, 5:30 மணிக்கு வந்த கலெக்டர்
ராஜகோபால் சுன்கரா, தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா,
வேட்பாளர்கள், அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் அறைகள் சீல்
வைக்கப்பட்டன.
அறை பகுதி, பாதுகாப்பு அறைகள் உள்ள கட்டடங்கள், 30
சி.சி.டி.வி., கேமராவால் கண்காணிக்கப்படுவதை, உறுதி செய்தனர். ஒரு
ஷிப்ட்டுக்கு, 210 பேர் என மத்திய போலீஸ் படை, தமிழ்நாடு சிறப்பு
போலீஸ், உள்ளூர் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.
இவ்வளாகத்துக்குள்
வரும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், தங்களது வருகையை பதிவு செய்ய
தனி வருகை பதிவேடும், வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் வருவதை
உறுதிப்படுத்த மற்றொரு வருகை பதிவேடும் பராமரிக்கப்படுகிறது.
சி.சி.டி.வி., கேமராவை கண்காணிக்க, 'பெரிய எல்.இ.டி., டி.வி.,க்கள்'
வைக்கப்பட்டுள்ளன. அவை தடைபடாமல் இயங்க மின்சாரத்துடன்,
யூ.பி.எஸ்., இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில்
இவ்வளாகம் முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டில்
கண்காணிக்கப்படுகிறது.

