ADDED : மார் 29, 2024 05:08 AM

ப.வேலுார்: ப.வேலுார் ராஜ வாய்க்காலில், இன்று முதல் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தி வைக்கப்படுவதால் சாகுபடி பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து, ராஜ வாய்க்கால் பராமரிப்பு பணிக்காக கடந்த பிப்., 20ல் தண்ணீர் நிறுத்தப்பட்டது. கடந்த, 10ல் மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் ஜேடர்பாளையம் படுகை அணைக்கு தண்ணீர் வருவது குறைந்து விட்டதால், ராஜ வாய்க்காலில் நீர் நிறுத்தம் செய்வதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜ வாய்க்கால் நீரை நம்பி, வெங்கரை, ஜேடர்பாளையம், பொத்தனுார், பாண்டமங்கலம், பரமத்தி, ப.வேலுார், நன்செய்இடையாறு, பாலப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் வெற்றிலை, வாழை, கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டால் பயிர்கள் பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. மேலும், இப்பகுதி மக்களின் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

