ADDED : ஜூன் 10, 2024 01:32 AM
திருப்பூர்: காவிரி ஆறு மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க, 'நடந்தாய் வாழி காவிரி' என்ற திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது. அதற்கான சர்வே பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. காவிரியுடன் இணையும் ஆறுகளை துாய்மைப்படுத்தும் பணியும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
கோவையில் துவங்கி, காவிரியில் கலக்கும் நொய்யல் ஆற்றை மேம்படுத்தவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மத்தியில் புதிதாக பொறுப்பேற்கும் அரசு விரைவில், புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறது. தமிழக அரசு, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறது. மானிய கோரிக்கை கூட்டத்தில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து, 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்திலேயே, நொய்யல் ஆறு முழுமைக்கும் துாய்மைப்படுத்தும் பணியை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் ஜீவநதி நொய்யல் சங்கத்தினர் கூறியதாவது:
நொய்யல் ஆறு மாசுபடாமல் தடுக்க வேண்டுமெனில், திடக்கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும்; பெரும்பாலும் தடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, சாக்கடை கழிவுநீர் நேரடியாக கலக்க அனுமதிக்கக்கூடாது. மூன்று கி.மீ., இடைவெளியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சேகரமாகும் சாக்கடை கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து ஆற்றில்விட வேண்டும். நொய்யல் கரையோரத்தில், இடவசதியுள்ள பகுதிகளில், சிறிய பூங்காக்களை உருவாக்கி, பொழுதுபோக்கு தலமாக மாற்ற வேண்டும். சாக்கடை கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து ஆற்றில் விடும் திட்டத்துக்கு, மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளித்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.