ADDED : ஏப் 21, 2024 07:17 AM
திருப்பூர் : மூன்று லோக்சபா தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், ஆறு சட்டசபை தொகுதிகளிலும் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப்பதிவு குறைந்து வருவது தெரிய வந்துள்ளது.
திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் நடந்து முடிந்தது. திருப்பூர் நகரப்பகுதியில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் வசிக்கின்றனர். குறிப்பாக, தென்மாவட்ட மக்கள் நிரந்தரமாக வசித்து வருகின்றனர். தொழில் நிமித்தமாக திருப்பூரில் வசிப்பதால், கட்சியினர் அவர்களையும் வாக்காளராக இணைத்து விட்டனர்.
சொந்த ஊர் வாக்குரிமை
இருப்பினும், சொந்த தொகுதியில் உள்ள வாக்காளர் பதிவை யாரும் நீக்குவதில்லை. இதன்காரணமாக, ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும், சொந்த ஊர்களில் உள்ள கட்சி நிர்வாகிகள் அழைப்பின் பேரில், சொந்த ஊரில் ஓட்டுப்பதிவு செய்யவே மக்கள் விரும்புகின்றனர். இதன் காரணமாகவே, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில், ஒவ்வொரு தேர்தலின் போதும், ஓட்டுப்பதிவு குறைகிறது. குறிப்பாக இரட்டைப்பதிவுதான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.2014 தேர்தல்
கடந்த, 2014 தேர்தலில், பெருந்துறை -84.33 சதவீதம், கோபி -80.25 சதவீதம், பவானி -79.24 சதவீதம், அந்தியூர் -79.73 சதவீதம் ஓட்டுப்பதிவாகியிருந்தது. திருப்பூர் வடக்கில், 69.18 சதவீதமும், திருப்பூர் தெற்கில், 68.21 சதவீதமும் பதிவாகியிருந்தது.2019 தேர்தல்
கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், பெருந்துறை -81.70 சதவீதம், கோபி -80.83 சதவீதம், பவானி -79.46 சதவீதம், அந்தியூர் -77.99 சதவீதம் ஓட்டுப்பதிவாகியிருந்தது. திருப்பூர் வடக்கில், 62.60 சதவீதமும், திருப்பூர் தெற்கில், 61.10 சதவீதமும் பதிவாகியிருந்தது.2024 தேர்தல்
நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப்பதிவில், பெருந்துறை -77.68 சதவீதம், கோபி -78.49 சதவீதம், பவானி -79.05 சதவீதம், அந்தியூர் -76.51 சதவீதம் ஓட்டு பதிவாகியிருக்கிறது. திருப்பூர் வடக்கில், 59.27 சதவீதமும், திருப்பூர் தெற்கில், 61.06 சதவீதமும் பதிவாகியிருந்தது. தொகுதியில், 70.58 சதவீதம் ஓட்டுப்பதிவாகியிருக்கிறது.
கடந்த லோக்சபா தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், கோபி உட்பட அனைத்து தொகுதியிலும், 2 முதல் 4 சதவீதம் அளவுக்கு ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது. கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில், திருப்பூர் தெற்கு தொகுதியில் ஓட்டுப்பதிவு குறையவில்லை; கடந்த, 2014 தேர்தலுடன் ஒப்பிடுகையில், 8.94 சதவீதம் குறைந்துள்ளது.
வடக்கில் கவனம்
இத்தேர்தலில், திருப்பூர் வடக்கு தொகுதியில் மட்டும், 3.31 சதவீதம் குறைந்துள்ளது; 2014 தேர்தலுடன் ஒப்பிடுகையில், 9.83 சதவீதம் ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது. தேர்தல் கமிஷன், மிகப்பெரிய தொகுதியான, வடக்கு தொகுதியின் மீது இனியாவது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.கடந்த, 2014 தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2019ல் ஓட்டுப்பதிவு, 3 சதவீதம் குறைந்தது; ஆனால், கடந்த, 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில், அனைத்து தொகுதிகளிலும் குறைந்துள்ளது. இத்தகைய ஓட்டுப்பதிவு குறைவு, ஒட்டுமொத்த தொகுதிக்குமானதுதான் என்று, கட்சியினர் புள்ளிவிவரத்துடன் தெரிவித்துள்ளனர். திருப்பூர் வடக்கு தொகுதியிலும், வெளிமாவட்ட மக்கள் அதிகம் வசிக்கின்றனர்; இவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராக உள்ளனர். இதன் காரணமாக, சொந்த ஊரில் நடக்கும் தேர்தல் திருவிழாவில் பங்கெடுப்பதையே விரும்பி, ஒவ்வொரு தேர்தலுக்கும் சென்று விடுகின்றனர்.
ஆதார் இணைப்பே சரியான தீர்வு
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில், வாக்காளரின் ஆதார் விவரத்தை முழுமையாக இணைக்கும் போது மட்டுமே, உண்மையான ஓட்டுப்பதிவு சதவீதம் தெரியவரும். அதுவரை, ஒவ்வொரு தேர்தலிலும், திருப்பூரின் ஓட்டுப்பதிவு சதவீதம் பின்தங்கியே இருக்கும். எனவே, செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில், தேர்தல் கமிஷன் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

