/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துாய்மை பணியாளர் குடியிருப்பு அவலம் ஆணைய தலைவரிடம் பெண்கள் குமுறல்
/
துாய்மை பணியாளர் குடியிருப்பு அவலம் ஆணைய தலைவரிடம் பெண்கள் குமுறல்
துாய்மை பணியாளர் குடியிருப்பு அவலம் ஆணைய தலைவரிடம் பெண்கள் குமுறல்
துாய்மை பணியாளர் குடியிருப்பு அவலம் ஆணைய தலைவரிடம் பெண்கள் குமுறல்
ADDED : ஜூலை 06, 2024 11:40 PM
ஈரோடு:ஈரோட்டுக்கு நேற்று வந்த தேசிய துாய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன், ஈரோடு மரப்பாலம் அருகே ஜீவானந்தம் சாலையில் உள்ள துாய்மை பணியாளர்களின் புதிய, பழைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எஸ்.பி., ஜவகர் உள்ளிட்டோர் சென்றனர்.
புதிய, பழைய குடியிருப்புகளில் முறையாக ஒயரிங் செய்யப்படாமல் உள்ளது. செப்டிக் டேங்க் மற்றும் குளியலறை கழிவு நீர் சேகரிக்கப்படும் தொட்டிகள் மிக மோசமாக, மூடிகள் உடைந்து காணப்பட்டன. குடியிருப்பை சுற்றிலும் கம்பங்கள் இருந்தும், மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை.
அடுக்குமாடி குடியிருப்பில் தரைதளத்தில் தான் குடிநீர் வருவதால், மற்ற தளங்களில் உள்ளவர்கள் தண்ணீரை துாக்கி செல்ல வேண்டி உள்ளது. மழை காலங்களிலும், கழிவுநீர் வெளியேறும் போதும் வீட்டுக்குள் செல்ல இயலாது. துர்நாற்றம் வீசுகிறது.
வசிக்க இயலவில்லை என, அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டினர். இதுபற்றி பெண்கள் புகார் தெரிவித்ததுடன், ஆணைய தலைவரை அழைத்து சென்று காட்டினர்.
தொடர்ந்து ஆணைய தலைவர் வெங்கடேசன் பேசுகையில், ''கழிப்பறை,குளியலறை, நுழைவு பகுதி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றி மின் விளக்குகள் அமைக்கப்படும். நல்லகவுண்டன்பாளையம் அல்லது 25 கி.மீ.,க்குள் அரசின் குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளதால், இங்குள்ளவர்கள் அங்கு செல்ல விரும்பினால் உதவுகிறோம்,'' என்றார்.
ஆனால், துாய்மை பணியாளர்கள், 'அங்கு குடியிருப்பு வழங்கினால், ஈரோட்டுக்கு வந்து செல்வது சிரமம். துாய்மை பணிக்கு அதிகாலை, 5:00 மணிக்கு அலுவலகத்தில் கையெழுத்திட்டு, பணி செய்து, மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு செல்ல இயலாது.
மாலையில் பணி முடிந்தாலும் இரவு வெகுநேரமாகும். இதே பகுதியில் வீடுகளை அமைத்து தர வேண்டும்' என்றனர். ஆலோசித்து முடிவெடுப்பதாக அவர் கூறி சென்றார்.