/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதை பொருள் விற்ற 107 கடைகளுக்கு 'சீல்'
/
போதை பொருள் விற்ற 107 கடைகளுக்கு 'சீல்'
ADDED : ஆக 12, 2025 01:17 AM
ஈரோடு, போதை பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் பொருட்டு, போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.
கலெக்டர் கந்தசாமி தலைமையில் உறுதிமொழி ஏற்று பேசியதாவது: போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்ற, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் உபயோகத்தை கட்டுப்படுத்த, 16 வகை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் கண்காணிப்பில் மாவட்டத்தில், 107 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பேசினார்.
* போதை பொருட்கள் ஒழிப்பு தினத்தையொட்டி, பள்ளி, கல்லுாரிகள், பல்வேறு அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு உறுதிமொழி நேற்று ஏற்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை தலைமை ஆசிரியை சுகந்தி துவக்கி வைத்தார். காந்திஜி சாலை, எம்.எஸ்.சாலையில் வணிக வரித்துறை அலுவலகம் வரை சென்று பின்னர் அதே திசையில் மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. போதை ஒழிப்பு பதாகைகளை ஏந்தி சென்ற மாணவியர், விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் மக்களுக்கு வழங்கினர்.
* பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம் துவங்கி வைத்தார்.
இதில், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர், பதாகை ஏந்தி பங்கேற்றனர். நிறைவில் மாணவர், ஆசிரியர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.