/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லோக் அதாலத்தில் 1,596 வழக்குகளுக்கு தீர்வு
/
லோக் அதாலத்தில் 1,596 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : ஜூன் 15, 2025 01:40 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட நீதிமன்றங்களில் நடந்த லோக் அதாலத்தில், 27 கோடி ரூபாய் மதிப்பில், 1,596 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், அந்தியூர், கொடுமுடி என மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நேற்று நடந்தது. ஈரோடு சம்பத் நகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த நீதிமன்றத்துக்கு, சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சமீனா தலைமை வகித்தார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எழில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராமச்சந்திரன் உடனிருந்தனர்.
மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த, 6,824 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 27 கோடியே, 6 லட்சத்து 92 ஆயிரத்து, 922 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 1,596 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
விபத்து காப்பீடு வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு, 57 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி சமீனா வழங்கி, வழக்கை முடித்து வைத்தார். குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மூன்று வழக்குகளில் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வதாக ஒப்புக்கொண்டு இணைந்தனர். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான ஸ்ரீவித்யா செய்திருந்தார்.