/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2.27 லட்சம் வாக்காளர்களை வரவேற்க 237 ஓட்டுச்சாவடிகள் தயார்
/
2.27 லட்சம் வாக்காளர்களை வரவேற்க 237 ஓட்டுச்சாவடிகள் தயார்
2.27 லட்சம் வாக்காளர்களை வரவேற்க 237 ஓட்டுச்சாவடிகள் தயார்
2.27 லட்சம் வாக்காளர்களை வரவேற்க 237 ஓட்டுச்சாவடிகள் தயார்
ADDED : பிப் 05, 2025 07:32 AM
ஈரோடு: ''கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று, 2.27 லட்சம் வாக்காளர்கள், 237 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன,'' என்று, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது: இடைத்தேர்தலை ஒட்டி ஈரோடு மற்றும் பக்கத்து மாவட்டத்தில் பணியாற்றும், இத்தொகுதி வாக்காளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு, தனியார் நிறுவனங்கள் அனைத்துக்கும் பொருந்தும். இதை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி வழங்கி, பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், 54 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, 41 லட்சம் ரூபாய் உரிய ஆவணங்களை சமர்பித்ததன் அடிப்படையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கு பாதுகாப்பு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தொகுதியில், 2 லட்சத்து, 27,546 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 90 சதவீத வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' வழங்கப்பட்டுள்ளது. 'பூத் சிலிப்' இல்லை என்றால், 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து சென்று ஓட்டுப்பதிவு செய்யலாம்.
மொத்தமுள்ள, 237 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 9 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. 237 ஓட்டுச்சாவடிகளிலும் 'வெப் கேமராக்கள்' பொருத்தப்பட்டு, நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுச்சாவடி மையங்களில் பணியாற்ற, 1,500 போலீசார், 3 குழுக்களாக துணை ராணுவ படை வீரர்கள் வந்துள்ளனர். தேர்தல் தொடர்பாக, 57 புகார் வந்தது. அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுத்து பதில் தெரிவிக்கப்பட்டது. புதிதாக வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளனர்.
ஓட்டு எண்ணும் பணி, சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் வரும், 8ம் தேதி நடக்கிறது. இன்று ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தகுந்த பாதுகாப்புடன் அங்கு எடுத்து செல்லப்பட்டு, பாதுகாப்பு அறையில் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் முன்னிலையில் பூட்டி 'சீல்' வைக்கப்படும். இன்று காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். மாலை, 6:00 மணிக்குள் ஓட்டுச்சாவடிக்குள் வரும் அனைத்து வாக்காளர்களுக்கும் ஓட்டுப்பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.