/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவகிரி தம்பதி கொலையில் அறச்சலுாரை சேர்ந்த 3 பேர் சிக்கினர் மண்வெட்டி பிடியால் தாக்கி கொன்றது அம்பலம்
/
சிவகிரி தம்பதி கொலையில் அறச்சலுாரை சேர்ந்த 3 பேர் சிக்கினர் மண்வெட்டி பிடியால் தாக்கி கொன்றது அம்பலம்
சிவகிரி தம்பதி கொலையில் அறச்சலுாரை சேர்ந்த 3 பேர் சிக்கினர் மண்வெட்டி பிடியால் தாக்கி கொன்றது அம்பலம்
சிவகிரி தம்பதி கொலையில் அறச்சலுாரை சேர்ந்த 3 பேர் சிக்கினர் மண்வெட்டி பிடியால் தாக்கி கொன்றது அம்பலம்
ADDED : மே 19, 2025 02:37 AM
ஈரோடு: சிவகிரி தம்பதி கொலை வழக்கில் சிக்கிய அறச்சலுாரை சேர்ந்த பழங்குற்றவாளிகள் மூவரிடம், கடத்துார் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தீவிர விசாரணை நடக்கிறது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி, விளக்கேத்தி, உச்சிமேடு, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்த வயதான தம்பதியர் ராமசாமி-பாக்கியம். கடந்த மாதம், 28ம் தேதி மர்ம கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மாவட்ட அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளிகளை பிடிக்க, 12 தனிப்படை அமைக்கப்பட்டது. இதில்லாமல், 600க்கும் மேற்பட்ட போலீசார் கொலையாளிகளை பிடிக்கும் பணியை மேற்கொண்டனர்.
அறச்சலுார் பகுதியில் கடந்த, 17ம் தேதி முதல் 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்தனர். இதில் ஒரு திருட்டு வழக்கில் தொடர்புடைய, அறச்சலுாரை சேர்ந்த பழங்குற்றவாளி ஆச்சியப்பன், 48, பிளாட்டினா பைக்கில் செல்வது தெரிந்தது. அவரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால், தங்களுக்குரிய பாணியில் விசாரித்த நிலையில் உண்மை வெளியானது.
சிவகிரி தம்பதி கொலையில் ஆச்சியப்பன் உள்பட மூவர் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆச்சியப்பன் தகவலின்படி அறச்சலுாரை சேர்ந்த மாதேஸ்வரன், 53, ரமேஷ், 52, ஆகியோரை பிடித்தனர். தென்னை மரம் ஏறும் தொழிலாளி களான மூவரையும், கடத்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மூவர் மீதும், பல்வேறு ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகள் உள்ளன.
மூவர் கொலையிலும் தொடர்பு?
பல்லடத்தில் நடந்த மூவர் கொலையிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. இதனால் பல்லடம் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசாரும் கடத்துார் வந்துள்ளனர். மண்வெட்டி பிடியால் (மூங்கில்) ராமசாமி-பாக்கியம் தம்பதி தாக்கி கொலை செய்யப்பட்டதும், சிறு கத்திகளை கொண்டு கை, காதுகளை வெட்டி நகைகளை திருடி சென்றதும் தெரியவந்தது. சிவகிரி மேகரையான் தோட்டத்தில், மண்வெட்டி பிடி, சிறு கத்திகளை வீசி சென்றதாக தெரிகிறது. இதை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் பிடிபட்ட மூவரின் ரத்தக்கறை படிந்த சட்டை, மொபைல்போன், சிம் கார்டு உள்ளிட்ட ஆதாரங்களை, அறச்சலுாரில் உள்ள அவர்களது வீடுகளில் போலீசார் தேடி வருகின்றனர். சிவகிரி தம்பதி கொலையில் மேலும் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. மூவர் மீதான கொலை, கொலை முயற்சி, திருட்டு வழக்குகள் குறித்தும் போலீசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.
ஐ.ஜி.,- டி.ஐ.ஜி., விசாரணை
தம்பதி கொலையில் சிக்கிய மூவரையும், நேற்று முன்தினம் இரவே போலீசார், கடத்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விட்டனர். இவர்களிடம் ஈரோடு எஸ்.பி., சுஜாதா, மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் உட்பட தனிப்படை போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று காலை, 7:00 மணி முதல் விசாரணையை துவக்கினர். இதையறிந்த மீடியாக்கள் கடத்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தனர். ஆனால், யாரும் உள்ளே நுழையாதபடி, ஸ்டேஷனின் பிரதான கதவு மூடப்பட்டு, உள் வளாகத்தில் போலீசார் நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் கோவை சரக டி.ஐ.ஜி., சசிமோகன் மதியம், 12:10 மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்தார்.
10 ஆண்டாக சிக்காத
பழங்குற்றவாளிகள்
சிவகிரி தம்பதி கொலையில் சிக்கியுள்ள மூவரும், சென்னி மலை, வெள்ளோடு, அறச்சலுார், கொடுமுடி போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதிகளில் உள்ள வீடுகளில், பணம், நகை, பொருட்களை கொள்ளையடித்து பலமுறை சிறை சென்றவர்கள்.
ஆனால் கடந்த, 10 ஆண்டுகளாக எந்த குற்ற வழக்கிலும் சிக்கவில்லை. மொபைல்போன், கைரேகை, 'சிசிடிவி' கேமரா வைத்து போலீசார் பிடிப்பதை அறிந்து, மொபைல்போன், கைரேகை, கேமரா பதிவுகள் இல்லாத இடங்களாக பார்த்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சென்னிமலையில்
நகைகள் விற்பனை?
மூவரும் கொள்ளை அடித்த நகைகளை, சென்னிமலை பகுதி நகை கடைகளில் விற்பனை செய்தோ, அடகு வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் சென்னிமலை, வெள்ளோடு பகுதி நகை கடை, நகை அடகு கடைகளில் 'சிசிடிவி' கேமரா, அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் சென்னிமலை போலீசார் மட்டுமின்றி தனிப்படை போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.