/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாக்காளராக பெயர் சேர்க்க 32,401 பேர் விண்ணப்பம்
/
வாக்காளராக பெயர் சேர்க்க 32,401 பேர் விண்ணப்பம்
ADDED : டிச 03, 2024 01:53 AM
வாக்காளராக பெயர் சேர்க்க 32,401 பேர் விண்ணப்பம்
திருப்பூர், டிச. 2-
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளில், சுருக்கமுறை திருத்த காலத்தில், வாக்காளர்களிடமிருந்து மொத்தம் 75,652 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக, 32,401 பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம், கடந்த அக்., 29ல் துவங்கி, நவ., 28 வரை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகளில் அமைந்துள்ள 2536 ஓட்டுச்சாவடி மையங்களிலும், நவம்பர் மாதம் நான்கு நாட்கள் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முகாம்களில் மட்டும், வாக்காளர்களிடமிருந்து மொத்தம் 18,188 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நவ., 28 உடன் முடிவடைந்த சுருக்கமுறை திருத்தத்தில், வாக்காளர்களிடமிருந்து, பெயர் சேர்ப்பதற்காக 32,401; பெயர் நீக்கத்துக்கு 12,847 ; முகவரி, மொபைல் எண் உள்பட அனைத்துவகை திருத்தங்களுக்காக 30,402; வெளிநாடு வாழ் பெயர் சேர்ப்பதற்காக 2 என, மொத்தம், 75,652 விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
விண்ணப்ப படிவங்கள் பரிசீலிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்; அதனடிப்படையில், வரும் ஜனவரி 6 ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
பல்லடம் 'டாப்'
சுருக்கமுறை திருத்தத்தில், மிகப்பெரிய தொகுதியான பல்லடத்திலேயே பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தத்துக்கு அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த தொகுதியில், பெயர் சேர்ப்பதற்காக 6,097 இளம் வாக்காளர் விண்ணப்பித்துள்ளனர்; பெயர் நீக்கத்துக்காக 2,561; திருத்தத்துக்காக 6,485 பேர் என, மொத்தம் 15,143 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
திருப்பூர் வடக்கு தொகுதியில், பெயர் சேர்க்க 5,580; நீக்கத்துக்கு 2,236; திருத்தத்துக்காக 5,829; வெளிநாடு வாழ் இந்தியர் பெயர் சேர்க்க 1 என, மொத்தம் 13,646 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவிநாசி தொகுதியில், பெயர் சேர்க்க 4,103; நீக்கத்துக்காக 2,187; திருத்தத்துக்கு 5,155; வெளிநாடு வாழ் இந்தியர் பெயர் சேர்ப்பதற்காக 1 என, மொத்தம் 11,446 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. உடுமலை தொகுதியில், பெயர் சேர்க்க 4,747; நீக்கத்துக்கு 1,889; திருத்தத்துக்கு 2,855 என, மொத்தம் 9,491 விண்ணப்பங்கள்; திருப்பூர் தெற்கு தொகுதியில், பெயர் சேர்க்க 3,203; நீக்கத்துக்கு 1,487; திருத்தத்துக்கு 3,334 என, மொத்தம் 8,024 வாக்காளர் விண்ணப்பித்துள்ளனர். மடத்துக்குளத்தில், மொத்தம் 6,442; காங்கயத்தில், 5,820; தாராபுரத்தில், 5,640 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.