/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
52வது 'நிட் பேர்' கண்காட்சி: 17ல் துவங்குகிறது
/
52வது 'நிட் பேர்' கண்காட்சி: 17ல் துவங்குகிறது
ADDED : செப் 07, 2025 01:12 AM
திருப்பூர் :திருப்பூர் ஐ.கே.எப், வளாகத்தில், 52வது 'நிட் பேர்' கண்காட்சி வரும், 17ம் துவங்கி 19 வரை மூன்று நாட்கள் நடக்கிறது. அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி காரணமாக புதிய நாடுகளுடனான வர்த்தகத்துக்கு இந்த கண்காட்சி வழி ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து, ஐ.கே.எப்., சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் நேற்று திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஐ.கே.எப்., - ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர்கள், வர்த்தக முகமை, ஏ.இ.பி.சி., மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் ஆகியவற்றை இணைத்து 52வது இந்திய சர்வதேச பின்னல் கண்காட்சி 'நிட் பேர்' கண்காட்சி, வரும், 17 முதல் 19ம் தேதி வரை திருப்பூர் ஐ.கே.எப்., வளாகத்தில் நடத்தப்படுகிறது. இதில், முக்கிய கருப்பொருள், 'ஒரு பசுமையான நீடித்த நிலைத்தன்மை' என்பதாகும்.
கண்காட்சி குறித்த விவரங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் சர்வதேச அளவில் அனைத்து முன்னணி வர்த்தகர்கள், முகமைகள், ஆலோசகர்கள் இதனை பார்வையிட வருகை தருகின்றனர். இதுதுவிர, அதிகளவிலான ஆடை உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர்கள் தங்கள் உற்பத்தியை இங்கு காட்சிப்படுத்துகின்றனர். திருப்பூர், கோவை, சென்னை, ஈரோடு, சேலம், கரூர், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய பகுதிகளிலிருந்தும் நிறுவனங்கள் அரங்கு அமைக்கவுள்ளன.
உலக அளவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்கள், தொழில் அமைப்பு சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இலங்கை, நார்வே, கொலம்பியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாடுகளிலிருந்து வர்த்தர்கள் தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளனர்.அமெரிக்காவின் சமீபத்திய வரி விதிப்பு அமலாக்கம் காரணமாக, பிற நாடுகளுடனான சந்தை மற்றும் வர்த்தக வாய்ப்புகள் தற்போது ஏற்றுமதியாளர்களுக்கு தேவையாக உள்ளது. புதிய நாடுகளுடனான வர்த்தகம் உலக சந்தையில் நம்மை மேலும் வலுப்படுத்தும் என
எண்ணுகிறோம்.
பிரிட்டன் உடனான வரியில்லா ஒப்பந்தம் இன்னும், 2 மாதத்தில், செயல்பாட்டுக்கு வரும் என உறுதியாக எதிர்பார்க்கிறோம். கண்காட்சியை மூன்று நாட்களும் காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை பார்வையிடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.