/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொடக்குறிச்சியில் 53 மி.மீ., மழை ஈரோட்டில் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
மொடக்குறிச்சியில் 53 மி.மீ., மழை ஈரோட்டில் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மொடக்குறிச்சியில் 53 மி.மீ., மழை ஈரோட்டில் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மொடக்குறிச்சியில் 53 மி.மீ., மழை ஈரோட்டில் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : அக் 17, 2024 01:15 AM
மொடக்குறிச்சியில் 53 மி.மீ., மழை
ஈரோட்டில் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஈரோடு, அக். 17-
மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக, 53 மி.மீ., மழை பதிவானது. ஈரோட்டில் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீ): ஈரோடு--7, பெருந்துறை-19, சென்னிமலை 17, அம்மாபேட்டை-2, வரட்டுபள்ளம் 19.40, கோபி-4.20, எலந்தகுட்டை மேடு 1.60, கொடிவேரி-11, குண்டேரிபள்ளம்-35, நம்பியூர்-25, சத்தி-27, பவானிசாகர்-24.20, தாளவாடி-1.
மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் கோபியில் ஒரு கான்கிரீட் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஈரோடு வெண்டிபாளையம் ரயில்வே நுழைவு பாலத்தின் கீழ் மழை நீர் அதிகளவில் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இது பழைய கரூர் சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. டூ-வீலர்கள், வேன்கள், ஆட்டோ, கார் உள்ளிட்டவை சென்று வரும். பொதுமக்கள் ரயில்வே நுழைவு பாலத்தை நடந்தே கடந்து சென்று வருவர். மாநகராட்சி சார்பில் சில ஆண்டுக்கு முன் இப்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மாநகராட்சியின் முயற்சி போதிய பலனளிக்கவில்லை. மாறாக தற்போது நெடுஞ்சாலை துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். ஒரு அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் இவ்வழியை பயன்படுத்துவதை தவிர்த்து மாற்று பாதையில் செல்ல வேண்டும் என்று
எச்சரித்துள்ளனர்.
*ஈரோடு மாநகராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் அறிவுறுத்தலின் படி, மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோட்டில் நேற்று முன்தினம் பெய்த மழையால், ஈ.வி.என் ரோடு, சென்னிமலை ரோடு, காளைமாடு சிலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. சாலை மற்றும் வீதிகளில் வெள்ளம் தேங்கியது.
தொடர்ந்து, அப்பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சாலையோர கடைகளால், சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால் தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்து இருப்பதும், கடைகளுக்கு நடைபாதைகள் போடப்பட்டதால் சாக்கடை அடைப்பு ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஜேசிபி கொண்டு வரப்பட்டு மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாக்கடை தூர்வாரப்பட்டது. அதன்பின்னர் அடைப்பு இல்லாமல்
மழை நீர் வடிந்தது.
* மாநகராட்சி 4ம் மண்டலத்திற்கு உட்பட்ட குயிலான்தோப்பு பகுதியில் கழிவு நீர் ஓடையில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. மாநகராட்சி ஆணையர் மனிஷ் நேரில் பார்வையிட்டு, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவு நீர் ஓடையை தூர்வார உத்தரவிட்டார். உடனடியாக ஓடை துார்வாரும் பணி நடந்தது.