விதி மீறியதால் 84 லாரிகளுக்கு தடை:வண்டல் மண் எடுப்பதில் மீண்டும் வில்லங்கம்
விதி மீறியதால் 84 லாரிகளுக்கு தடை:வண்டல் மண் எடுப்பதில் மீண்டும் வில்லங்கம்
ADDED : ஜூன் 10, 2026 02:38 AM
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வருவாய் மற்றும் நீர்வளத்துறை அலுவலகங்களில் அனுமதி பெற்ற விவசாயிகள், லாரிகளில் வண்டல் மண்ணை எடுத்து செல்கின்றனர்.
இதற்கிடையே வண்டல் மண்ணை விவசாய நிலங்களில் கொட்டாமல், விற்பனை நோக்கத்தில் வேறிடங்களில் கொட்டுவதாக தகவல் கிடைத்தது. இதனால் வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.
மாற்றிடங்களில் வண்டல் மண்ணை கொட்டிய லாரிகளுக்கு மீண்டும்
அனுமதி இல்லை என்று, காராச்சிக்கொரை வன சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தினர்.
இதனால் நேற்று, 100க்கும் மேற்பட்ட லாரி மற்றும் டிராக்டர்கள் அணிவகுத்து நின்றன. வருவாய், நீர்வளத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், 'வேறிடத்தில் வண்டல் மண்ணை கொட்டிய, 84 லாரிகள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதிக்கப்படவுள்ளது. இந்த வாகனங்களை மீண்டும் அனுமதிக்க முடியாது. மற்ற வாகனங்களுக்கு தடையில்லை' என்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், விற்பனை நோக்கத்தோடு நாங்கள் வண்டல் மண் எடுக்கவில்லை. குறிப்பிட்ட சர்வே எண் உள்ள விவசாய நிலங்களின் அருகில் கொட்டியுள்ளோம். 84 லாரிகளுக்கு தடை விதிக்காமல் அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் மற்ற லாரிகளிலும் வண்டல் மண் எடுக்க செல்ல மாட்டோம் என்றனர்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதி யில் வண்டல் மண் எடுப்பது, நேற்று முழுமையாக தடைபட்டது.
