/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடற்புழு நீக்க மாத்திரை 97 சதவீதம் வினியோகம்
/
குடற்புழு நீக்க மாத்திரை 97 சதவீதம் வினியோகம்
ADDED : பிப் 18, 2024 10:26 AM
'திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு தவணைகளில், 8.52 லட்சம் பேருக்கு (97 சதவீதம்) குடற்புழு நீக்க மாத்திரை வினியோகிக்கப்பட்டுள்ளது,' என, மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
குடற்புழுக்களை தடுக்க, ஒன்று மற்றும் இரண்டு வயதுள்ள குழந்தைகளுக்கு 'அல்பென்சோல்' அரைமாத்திரையும், இரண்டு முதல், 19 வயது வரை குழந்தைகள், 20 முதல், 30 வயதுள்ள பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
கடந்த, 9ம் தேதி முதல் தவணையாக குழந்தைகள், பெண்கள் சேர்த்து, 6.73 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. விடுபட்டவர்களுக்கு இரண்டாம் தவணையாக, கடந்த, 16 ம் தேதி அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக மாத்திரை வினியோகிக்கப்பட்டது.
இரண்டு தவணைகளில் சேர்த்து இதுவரை, ஒன்று முதல், 19 வயது வரையுள்ள குழந்கைளுக்கு, 6.73 லட்சம் மாத்திரைகளும், 20 முதல், 30 வயது வரை உள்ள பெண்களுக்கு, 1.79 லட்சம் மாத்திரைகளும் என மொத்தம், 8.52 லட்சம் மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டுள்ளது.
சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில்,' மாவட்டத்தில், 9.84 லட்சம் பேருக்கு மாத்திரை வினியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரண்டு தவணைகளில், 8.52 லட்சம் மாத்திரை வினியோகிக்கப்பட்டு விட்டது; 97 சதவீதம் பேருக்கு மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. மீதி, 1.32 லட்சம் பேருக்கும் மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்படும். மாநகராட்சி நகர்ப்புற சுகாதாரம் மையம், மேம்படுத்தப்பட்ட, ஆரம்ப, துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள் மூலம் நடப்பு வாரத்தில் மீதமுள்ள மாத்திரைகளும் வினியோகிக்கப்படும்,' என்றார்.