ADDED : ஜன 13, 2024 04:10 AM
சென்னிமலை,: சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேரோட்ட விழா, வரும், 18ம் தேதி தொடங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது.
விழா தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. ஈரோடு ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் தலைமை வகித்தார். போக்குவரத்து துறை, தீயணைப்புதுறை, வருவாய்துறை, சுகாதாரதுறை, போக்குவரத்து காவல், மின்சாரவாரியம், நெடுஞ்சாலை துறை, பேரூராட்சி உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.தைப்பூச நாளான, 25ம் தேதி, தேரோட்டம் நடக்கும், 26, 27 தேதி என மூன்று நாட்களும், சென்னிமலை மலை கோவிலுக்கு அதிக பக்தர்கள் செல்வார்கள். இதனால் மலைப்பாதை சாலை வழியாக டூவீலர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதேசமயம் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான பஸ்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டது.திருவிழாவில் ஆபத்தான பெரிய ராட்டினம் போன்றவை அமைக்க கூடாது. மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் கடைகளை அமைக்க வேண்டும். இதை டவுன் பஞ்., நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். மகா தரிசனம் நடக்கும், 31ம் தேதி டவுன் பகுதியில் நெரிசலை குறைக்க போக்குவரத்தில் மாற்றம் செய்ய, தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது.'கனரக வாகனங்களுக்குதடை விதிக்க கோரிக்கை'சென்னிமலையில் தைப்பூச தேர் திருவிழா நடக்கும், ஐந்து நாட்களும், சென்னிமலை நகரில் கனரக வாகனங்களை தடை செய்து, மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்ய, அ.தி.மு.க.,வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சென்னிமலை போலீசாரிடம், ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர் ரமேஷ் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: சென்னிமலை தைப்பூச விழாவில் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம், தெப்பதேர், மகாதரிசனம் உள்ளிட்டவை ஜன.,26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில் பல்வேறு கிராமங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து கூட்டம், கூட்டமாக வருவர். இதனால் இந்த ஐந்து நாட்களிலும், சென்னிமலை நகரில் கனரக வாகனங்கள் வராமல் மாற்று பாதையில் திருப்பி விட்டு, சென்னிமலையில் மக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.