/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றதாக அறிவிப்பு
/
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றதாக அறிவிப்பு
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றதாக அறிவிப்பு
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றதாக அறிவிப்பு
ADDED : ஆக 06, 2025 12:38 AM
ஈரோடு:கீழ்பவானி வாய்க்கால் புதுப்பித்தல் திட்டப்பணி நிறைவடைந்துள்ளதாக நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் துவங்கி, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 2.07 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி வழங்குகிறது.
மண்ணாலான இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக முழுமையாக சீரமைக்கப்படாததால், 2021ல் அ.தி.மு.க., ஆட்சியில், 709 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கீழ்பவானி விரிவான மற்றும் புதுப்பித்தல் திட்டப்பணி துவங்கியது.
கான்கிரீட் தளம், கான்கிரீட் சுவர் அமைக்கக்கூடாது என்றும், அமைக்க வேண்டும் என்றும் இரு தரப்பாக விவசாயிகள் போராடினர். இருதரப்பு விவசாயிகளும் ஏற்றுக்கொண்ட பணிகளை கணக்கிட்டு, அப்பணிகள் செய்யப்பட்டு, 100 சதவீதம் பணி முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கீழ்பவானி பிரதான கால்வாய், பகிர்மான கால்வாய் என பிரித்து பணிகள் நடந்தன. இதில், 523 இடங்களில் தலைமை மதகுகள், நேரடி மதகுகள் கட்டப்பட்டுள்ளன. கால்வாயில், 151.52 கி.மீ., துாரத்துக்கு பாதுகாப்பு சுவர், சாய்வு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.
மொத்தம், 123 மைல் நீளம் கொண்ட கீழ்பவானி வாய்க்கால் பிரதான கால்வாயில், 10 பாலங்கள், 129 மழைநீர் வடிகால் பாலங்கள், 9 தொட்டி பாலங்கள், 3 வெளியேற்று நீர் போக்கிகள், 1 குழிப்பாலம், ஒரு ரெகுலேட்டர் பணி நிறைவு பெற்றுள்ளது. 35 கி.மீ., துாரத்துக்கு பாதுகாப்பு மற்றும் சாய்வு சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பகிர்மான கால்வாயில், 409 மதகுகள், 22 ரெகுலேட்டர், 450 கால்வாய் இறக்கங்கள், 22 குழாய் சிறுபாலங்கள், 116.52 கி.மீ.,க்கு பாதுகாப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு கூறினர்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி கூறுகையில், ''கீழ்பவானி வாய்க்கால் புதுப்பித்தல் மற்றும் சீரமைத்தல் திட்டப்பணி, 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பிரதான கால்வாயின், 13.5 மைலில் ஏற்பட்ட கசிவு சீரமைக்கப்பட்டு தண்ணீர் சீராக செல்கிறது,'' என்றார்.

