/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோலாகலமாக நடந்த ஆருத்ரா தரிசன விழா
/
கோலாகலமாக நடந்த ஆருத்ரா தரிசன விழா
ADDED : ஜன 04, 2026 05:26 AM

ஈரோடு: ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தில் ஆருத்ரா தரிசன விழா நேற்று கோலாகலமாக நடந்தது,
ஈரோடு கோட்டையில் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடப்பாண்டு ஆருத்ரா தரிசன விழா, கடந்த மாதம், 25ல் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு ஆருத்ர கபாலீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று அதிகாலை நடராஜருக்கு பல்வேறு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்து, பட்டு வஸ்திரம் சாற்றி தீபாராதனை காட்டினர். பிறகு கோவில் வளாகத்தில் சிவகாமசுந்தரி உடனமர் நடராஜர், மாணிக்கவாசகருடன் எழுந்தருளினார். தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் நடராஜர் வீதி உலா நடந்தது. கோவிலில் தொடங்கிய ஊர்வலம் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.* சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் நேற்று காலை, 6:30 மணிக்கு நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. அதை தொடந்து சுவாமி புறப்பாடு நடந்தது. டவுன் நான்கு ராஜவீதிகளில் மேளதாளம் முழங்க திருவீதி உலா நடந்தது. எராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
*டி.என்.பாளையத்தை அடுத்த கணக்கம்பாளையம் காமாட்சி அம்மன் கோவிலில், நடராஜ பெருமான், சிவகாமி தாயாருக்கு நேற்று காலை பல்வேறு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.
* திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அகிலாண்டபுரத்தில் அகிலாண்டீஸ்வரர், மருதுறை பட்டீஸ்வரர், நத்தக்காடையூர் ஜெயம் கொண்டீஸ்வரர், மடவிளாகம் ஆருத்ரா கபாலீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசன விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
* புன்செய்புளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில், தில்லை கூத்தப்பெருமானுக்கு நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு வழிபாடு, திருக்காட்சி தரிசனத்தை தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. பின் திருவெம்பாவை வழிபாடுகளுடன், மாணிக்கவாசகர்-சிவகாமியம்மை உடனமர் தில்லை அம்பலவாணர் உட்பிரகார மண்டபத்தில் எழுந்தருளினார். அதை தொடர்ந்து அம்பலவாணர் உற்சவர் ஆருத்ரா தரிசன திருவீதி உலா நடந்தது. இதில் பெண்கள் கோலாட்டம் ஆடியபடி வந்தனர்.

