/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உணவு பற்றாக்குறையால் விளைநிலம் தேடும் பறவைகள்
/
உணவு பற்றாக்குறையால் விளைநிலம் தேடும் பறவைகள்
ADDED : செப் 06, 2025 02:01 AM
பொங்கலுார் :உணவுப் பற்றாக்குறையால், பறவைகள் காய்கறிகளை சாப்பிட வருவதால் விவசாயிகள் அவற்றை விரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுவதால், புல்வெளிகள், தாவரங்கள் காய்ந்து வருகின்றன. காடுகளை நம்பி உயிர் வாழும் மயில், கிளி உள்ளிட்ட பறவைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால் விவசாயிகள் குறைந்த பரப்பளவில் மட்டுமே பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
பறவைகள் தங்கள் பசியை போக்க விளை நிலங்களை நோக்கி வரத் துவங்கியுள்ளன. சுரைக்காய், மிளகாய், தக்காளி, பீர்க்கன், முருங்கை ஆகிய காய்களை சாப்பிடுகின்றன. காய்கறி சேதத்தை தவிர்க்க விவசாயிகள் பறவைகளை விரட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது.
பொங்கலுார் வட்டார விவசாயிகள் கூறுகையில், 'நடப்பாண்டில் கோடை மழையும் சரிவர பெய்யவில்லை. வெப்பச்சலன மழையாவது பெய்யும் என்று எதிர்பார்த்தோம். அதுவும் பொய்த்தது. மழை இன்மையால் பறவைகளுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை.
காடுகளை நம்பியுள்ள பறவைகள் விளை நிலங்களை நோக்கி வருகிறது. அவை காய்களை முழுமையாக சாப்பிடாமல் சிறிதளவு மட்டும் சாப்பிட்டு சென்று விடுகிறது. இதனால், காய்கள் சொத்தையாக மாறிவிடுகிறது. இதை தவிர்ப்பதற்காக பறவைகளை விரட்ட ஆள் நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.