/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுவன் மொபட் மோதி வாலிபர் பலி; தந்தை கைது
/
சிறுவன் மொபட் மோதி வாலிபர் பலி; தந்தை கைது
ADDED : அக் 13, 2024 07:20 AM
பவானி : ஈரோடு மாவட்டம், பவானி அருகே காலிங்கராயன்பாளையம், மேற்கு வீதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 24; கரை எல்லப்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் குமரேசன், 24; நண்பர்களான இருவரும் கடந்த மாதம், 30ம் தேதி இரவு, மூலப்பாளையம் டாஸ்மாக் கடைக்கு மது குடிக்கச் சென்றனர்.
போதையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மொபட்டை திருடிக்கொண்டு, செங்கலாபாறை அருகே பவானி ரிங் ரோட்டில் அமர்ந்து மீண்டும் மது அருந்தினர்.
அப்போது அவ்வழியே அதிவேகமாகச் சென்ற ஸ்கூட்டர், வெங்கடேஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த வெங்கடேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில், டாஸ்மாக் கடை அருகே நிறுத்தியிருந்த மொபட்டை காணவில்லை என, காலிங்கராயன்பாளையம், இ.பி.காலனியைச் சேர்ந்த கலைச்செல்வன், 49, புகாரின்படி, குமரேசனை போலீசார் கைது செய்தனர். அதேசமயம், வெங்கடேஷ் மீது மோதிய டூ-வீலரை சித்தோடு போலீசார் தேடினர்.
விசாரணையில், தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும், 15 வயதான சிறுவன், 'யமஹா பேஷன்' ஸ்கூட்டரை பெற்றோருக்கு தெரியாமல் ஓட்டி வந்ததும், அப்போது சாலையில் அமர்ந்து மது குடித்த வெங்கடேஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதும் தெரியவந்தது.
மொபட் உரிமையாளரான, தீரன் சின்னமலை நகரைச் சேர்ந்த சிறுவனின் தந்தை செல்வராஜை, சித்தோடு போலீசார் கைது செய்தனர்.