காலை உணவு திட்டம் விரிவாக்கம் மேலும் 28,984 மாணவ, மாணவியர் பயன்
காலை உணவு திட்டம் விரிவாக்கம் மேலும் 28,984 மாணவ, மாணவியர் பயன்
ADDED : செப் 23, 2026 07:26 AM

ஈரோடு:தமிழக அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. த.வெ.க., ஆட்சியில் இத்திட்டத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயரிடப்பட்டு, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில், கைத்தறி, துணி நுால் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தில் ஏற்கனவே, 1,208 பள்ளிகளில், 59,070 மாணவ, மாணவியர் பயன் பெற்றனர். விரிவாக்க திட்டத்தில், 423 பள்ளிகளை சேர்ந்த, 28,984 மாணவ, மாணவியர் இணைக்கப்பட்டுள்ளனர். இதன்படி மொத்தம், 1,631 பள்ளிகளில், 88,054 பேர் பயன் பெறுகின்றனர். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
