/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் 50 பேருக்கு புற்றுநோய்; அமைச்சர் தகவல்
/
ஈரோடு மாவட்டத்தில் 50 பேருக்கு புற்றுநோய்; அமைச்சர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 50 பேருக்கு புற்றுநோய்; அமைச்சர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 50 பேருக்கு புற்றுநோய்; அமைச்சர் தகவல்
ADDED : ஆக 12, 2024 07:03 AM
ஈரோடு: ''ஈரோடு உள்பட நான்கு மாவட்டங்களில், 4.19 லட்சம் பேருக்கு நடந்த புற்றுநோய் பரிசோதனையில், 176 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது,'' என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், ஈரோட்டில் கூறினார்.
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில், 96 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய, 20 கட்டண படுக்கை கொண்ட அறைகளை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று திறந்து வைத்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் மூன்று சுகாதார நிலையங்கள், 15 ஆரம்ப சுகாதார நிலையங்களில், செவிலியர் குடியிருப்பு, சித்த மருத்துவம், மருத்துவ குடியிருப்பு உள்ளிட்ட பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கை அறை ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவை, மதுரை, சேலம் என மூன்று மாவட்டங்களில் கட்டண படுக்கை அறை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனையில், 20 படுக்கை அறை இன்று (நேற்று) திறக்கப்பட்டது. இதற்கான கட்டணம் குறித்து, ஓரிரு நாளில் அதிகாரிகள் தெரிவிப்பார்கள்.
தமிழகத்தில் ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்துார் மாவட்டங்களில் சாயக்கழிவு, தோல் தொழிற்சாலை, ரப்பர் உற்பத்தி கழிவுகளால், புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த மாவட்டங்களில் வசிக்கும், 9.82 லட்சம் பேருக்கு புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையேற்று, 4.19 லட்சம் பேர் பரிசோதனைக்கு வந்தனர். புற்றுநோய் இருக்கலாம் என, 13 ஆயிரத்து, 89 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதில், 176 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும், 1.27 லட்சம் பேரை பரிசோதனை செய்ததில், 3,039 பேர் புற்றுநோய் இருக்கலாம் என கண்டறியப்பட்டது. இதில், 50 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்து, தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பாதிப்பு குறித்து பரிசோதனை நடத்தப்படும். 2,253 மருத்துவர் பணியிடம் தேர்வுக்கு பிறகு கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். இதேபோல், 1,066 சுகாதார ஆய்வாளர் பணியிடம், 2,250 கிராம சுகாதார செவிலியர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக, நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. வழக்கு முடிந்தவுடன் இவை நிரப்பப்படும். நாமக்கல்லில் கிட்னி விற்பனை தொடர்பான புகாரில் சிக்கியவர்கள் அனைவரும், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.,க்கள் பிரகாஷ், செல்வராஜ், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
'ஈரோடு ஜி.ஹெச்.,ல் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி'
நிகழ்ச்சியில் அமைச்சர் சுப்பிரமணியன் மேலும் பேசியதாவது: மாவட்டத்தில் கோபி அரசு மருத்துவமனையில், 6.89 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கட்டடம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சத்தி அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர், சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.பவானி அரசு மருத்துவமனையில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை பொறுத்தவரை, 29.16 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில்லாமல் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், உலக தரத்துடன் ஏழு அறுவை சிகிச்சை அரங்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இரண்டு மாதத்தில் இது பயன்பாட்டுக்கு வரும்.மேலும் மருத்துவமனையில், 8.5 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி செய்து தர பட்ஜெட்டில் முதல்வர் அறிவித்துள்ளார். மிக விரைவில் எம்.ஆர்.ஐ., கருவி பொருத்தப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.