/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் மாட்டு பொங்கல் விழா கோலாகலம்
/
மாவட்டத்தில் மாட்டு பொங்கல் விழா கோலாகலம்
ADDED : ஜன 16, 2025 06:28 AM
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி சுற்று வட்டார கிராமங்களில், நேற்று மாட்டு பொங்கல் விழாவை, விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடினர்.
பனையம்பள்ளி, மாதம்பாளையம், காவிலிபாளையம், நொச்சிக்குட்டை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பூஜை செய்து தோட்டங்களில் விவசாயிகள், பொங்கல் வைத்து கொண்டாடினர். பல கிராமங்களில் இசை, கலாசார, பாரம்பரிய போட்டிகளை நடத்தினர். மேலும் ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், கபடி, கோலப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. கால்நடைகளுக்கு படையலிட்டு, கரும்பு உடைத்தும், ஒயிலாட்டம், கும்மியாட்டம் ஆடியும் மாட்டு பொங்கலை கொண்டாடினர்.
* ஈரோடு, கருங்கல்பாளையத்தில் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டுதல், கால்களில் லாடம் அடித்தல், தொழுவத்தை சுத்தம் செய்தல் ஆகிய பணிகள் நடந்தன. பின், மாடுகளுக்கு மாலை அணிவித்து திலகமிட்டனர். மாலையில் பொங்கல் வைத்து தீப, துாப ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடத்தி மாடுகளை வணங்கினர். மாடுகளுக்கு பொங்கல், வாழை பழங்களை கொடுத்தனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கோ பூஜை நேற்று நடந்தது.
* கோபி பகுதி விவசாயிகள் மாட்டு தொழுவத்தில், தங்கள் வளர்ப்பு கால்நடையினங்களை குளிப்பாட்டி, அதற்கு மூக்கணாங்கயிறு, கன்னித்தும்பு, கலகல மணியோசையுடன் கூடிய சலங்கைகளுடன் கயிறு கட்டி அலங்கரித்தனர். பின் விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் மாட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். சிறுவலுார், பதிப்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், பொலவக்காளிபாளையம், புதுக்கரைப்புதுார் உள்பட பல பகுதிகளில் மாட்டு பொங்கலை விவசாயிகள் கொண்டாடினர். இதேபோல், பச்சைமலை முருகன் கோவிலில் உள்ள கோசாலையில் உள்ள பசுமாடுகளை குளிப்பாட்டி, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
* திருப்பூர் மாவட்டம், காங்கேயம் குட்டப்பாளையத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி மையத்தில், காளைகள், நாட்டு மாடுகள் குறித்தும், பொங்கல் விழா கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் வகையில் கருத்து கூறப்பட்டது. பாரம்பரிய முறைப்படி பானையில் பொங்கல் வைத்து, செங்கரும்புடன் பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு கொண்டாடினர். தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேயசிவசேனாபதி, காளைகள் ஆராய்ச்சி மைய அறங்காவலர், முன்னாள் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிதம்பரம், சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

