/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளேக் மாரியம்மன் கோவிலில் சித்திரை விழா கோலாகலம்
/
பிளேக் மாரியம்மன் கோவிலில் சித்திரை விழா கோலாகலம்
ADDED : மே 22, 2025 01:57 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி, பிளேக் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா விமர்சையாக நடந்தது. மாவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
புன்செய்புளியம்பட்டியில், பிரசித்தி பெற்ற பிளேக் மாரியம்மன் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 14ல் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை மற்றும் கம்பம் சுற்றி விளையாடுதல் நடந்தது.
நேற்று முன்தினம் ஆபரண பெட்டி எடுத்து வருதல், கரகம் பாலித்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான, எட்டாம் நாள் விழாவான நேற்று காலை பக்தர்கள் விரதம் இருந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த அக்னி சட்டி எடுத்தனர். தொடர்ந்து, ஏராளமான பெண்கள் கோவில் முன் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மதியம், 300க்கும் மேற்பட்ட பெண்கள் பச்சரிசி மாவு மற்றும் பூஜை பொருட்களை தட்டில் வைத்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர்.
பின், அம்மனுக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் உழவர் இளைஞர் மன்றம் சார்பில் அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. தொடர்ந்து கம்பம் பிடுங்கி ஆற்றில் விடப்பட்டது. இரவு மாரியம்மன், பிளேக் மாரியம்மன் மற்றும் ஊத்துக்குளி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா நடந்தது. நாளை மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மறு பூஜையுடன் சித்திரை விழா நிறைவு பெறுகிறது.